Close
பிப்ரவரி 23, 2025 4:14 காலை

நெசவாளர்கள் கூலி வழங்கும் முறையை மறுபரிசீலனை செய்ய ஆட்சியரிடம் மனு..!

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நெசவாளர் தலைவர்கள்

காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று, பட்டு கூட்டுறவு சங்கங்களில் புதிய நடைமுறைப் படுத்தப்பட்ட கூலி வழங்கல் முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பட்டு கைத்தறி சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் நெசவினை செய்து பட்டு சேலைக்கான கூலியை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய உத்தரவை அனுப்பி வைத்தார். அதில் நெசவு செய்த நெசவாளர்களுக்கு கூலியை ரொக்கமாக அளிக்காமல் வங்கியில் கணக்கு வைக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

இதற்கு நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் என அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று மறுபரிசலினை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ஆனால் அந்த நடைமுறையை பின்பற்றியே தொடர்ந்து செயல் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறுவதால் இதனை மறுபரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் கோயில் சங்கப் பிரதிநிதிகள் என இருபதுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த நடைமுறையினால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேலும் கேள்விக்குறியாகி வருவதால் இதை பரிசீலனை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக நடவடிக்கை குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஸ்டாலின், முருகன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வள்ளிநாயகம், அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் விஸ்வநாதன், திருவள்ளூர் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வாசு, கலைஞர் கருணாநிதி பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் யுவராஜ், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கே யு சோமசுந்தரம், சி ஐ டி யு தொழிற்சங்க செயலாளர் ஜீவா, வரதராஜா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top