Close
பிப்ரவரி 22, 2025 7:47 மணி

கீழ்படப்பை சிவன் கோயில் கும்பாபிஷேகம் : விமர்சையாக நடந்தது..!

கும்பாபிஷேக விழாவில் குவிந்த பக்தர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு வீரட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும்.

புராண காலத்தில் கோராசுரன் எனும் அசுரன் முனிவர்களுக்கும் அரசர்களுக்கும் பெரும் துன்பத்தைக் கொடுத்து வந்தான். முனிவர்களின் வேண்டுதல்படி அசுரனைச் சிவபெருமான் அழித்து வீரட்டகாசமாய் இந்த தலத்தில் காட்சியளித்தார்.

அதனால் இங்குள்ள சிவபெருமானுக்கு வீரட்டீஸ்வரர் என்று பெயர் வழங்கப்படுகிறது.

சந்திரன் தட்சனின் இருபத்தியேழு மகள்களைத் திருமணம் செய்துகொண்டான். அவர்களில் ரோகணி என்பவளின்மீது மட்டும் அதிக அன்பு செலுத்தியதால் தட்சனின் சாபத்திற்கு ஆளாகினான்.

பின்னர் சாப விமோசனம் வேண்டி சந்திரன் இத்தலத்திற்கு வந்து வீரட்டீஸ்வரரை வணங்கி சாபம் நீங்கினான். அதனால் இத்தலம் சந்திரன் பரிகாரத் தலமாக உள்ளது. இங்கு வந்து வேண்டினால் மனசஞ்சலங்கள் நீங்கும் என்பதும் பயம் நீங்கி மன தைரியம் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை.

பழமையான இத்தலத்திற்கு 1999 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட முடிவு செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கிராம மக்கள் திருப்பணிகளைத் தொடங்கினர். ஐந்துநிலை ராஜகோபுரம், விமானங்கள் முதலான திருப்பணிகளை முடித்தனர். பின்னர் பிரகாரத்தில் கருங்கல் பதித்தல் முதலான திருப்பணிகளும் செய்து முடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 2ஆம்தேதி தொடங்கின.

2ஆம் தேதி கிராமதேவதை வழிபாடும்,3ஆம் தேதி விநாயகர் பூஜையும், 4ஆம் தேதி சண்முகர் பூஜையும், 5ஆம் தேதி திருமால் பூஜையும், 6ஆம் தேதி நவக்கிரக பூஜை மற்றும் பைரவர் பூஜையும் 7 ஆம் தேதி அஷ்ட லஷ்மி பூஜையும் நடைபெற்றன.

8ஆம் தேதி சனிக்கிழமை காலையில் உபயதாரர்கள், ஊர்மக்கள் முன்னிலையில் ஐந்து நிலை இராஜகோபுரத்தில் 7 கலசங்கள் பொருத்தப்பட்டன. அதன்பின்னர் மூலவர், அம்பாள், விநாயகர், காளத்தீஸ்வரர், முருகர், துர்கை, சண்டேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், நவகிரகம் ஆகிய சந்நிதிகளில் கலசங்கள் பொருத்தப்பட்டன.

அன்று நண்பகல் 12 மணிக்கு மூலவர் வீரட்டீஸ்வரர், அம்பாள் சாந்தநாயகி, காளத்தீஸ்வரர், சாந்த விநாயகர், முருகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் பின்புறம் 36 யாக குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. கும்பாபிஷேக யாகசாலையில் 75 வேத விற்பன்னர்கள் பங்குபெற்றனர்.

சனிக்கிழமை மாலையில் முதல் கால யாக பூஜையும் ஞாயிற்றுக்கிழமை 2ஆம் கால, 3ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றன.

திங்கட்கிழமை காலையில் நான்காம் கால யாகபூஜை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு வேதமந்திரங்களும் மங்கல வாத்தியங்களும் முழங்க கும்பாபிஷேக குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டன. 10 மணிக்கு வானத்தில் கருடன் வட்டமிட சிவவாத்தியங்கள் ஒலிக்க பக்தர்கள் ஹரஹர கோஷங்கள் எழுப்பிட வேதவிற்பன்னர்கள் புனித நீரை கோபுர விமானங்கள் மீது ஊற்றினர்.

பின்னர் மூலவர் வீரட்டீஸ்வரர், சாந்தநாயகி அம்பாள், சாந்தவிநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் தொண்டை மண்டல ஆதினம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை, முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மொளச்சூர் பெருமாள், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், மாவட்ட கவுன்சிலர் அமுதா செல்வம், ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.கர்ணன், கோயில் ஆய்வர் திலகவதி மற்றும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுமார் 5ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் சி.குருநாதன், க.கெஜலட்சுமி, சா.ஏழுமலை மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top