உயர்நிலைப்பள்ளியில் எதற்காக மரபு விளையாட்டுகளை விளையாட வைக்கின்றார்கள்?
மரபு விளையாட்டுகளை இப்போது யார் விளையாடுகிறார்கள்?
இந்த விளையாட்டுகளை விளையாடுவதால் என்ன பயன் விளைந்திடப் போகிறது?
இது போன்ற நிகழ்வுகள் இக்காலத்தில் தேவையா?
இன்னும் இதுபோன்ற எத்தனை எத்தனையோ கேள்விகள் மற்றும் வார்த்தைகளுக்குப் பதில் கூறுவதே அந்த 100 நிமிடம் ஆகும்.
பள்ளி வேலை நேரம் என்பது காலை 9.00 மணிமுதல் மாலை 4.10 மணி வரை. பொதுவாகத் தமிழ்நாடு முழுவதும் இந்த நடைமுறையே உள்ளது. காலை 8.30 மணிக்குப் பெற்றோர்களையும், வீட்டையும் விட்டு வருகின்ற குழந்தைகளுக்கு அத்தனை ஆறுதலும், இளைப்பாறுதலும் தருவது வகுப்பறைகளே.
சாக்பீஸ்களும், கரும்பலகைகளும் குழந்தைகளை நெறிப்படுத்துகின்றன. ஆனால் குழந்தைகளை மகிழ்விக்க மைதானங்களே பயன்படுகின்றன. மைதானங்களின் மண்துகள்கள் முழுதும் அவர்களின் பாதங்களுக்குப் பூக்களை எப்போதும் கொடுப்பவையாக இருக்கின்றன.
உடற்கல்வி ஆசிரியர் கற்றுத்தருகின்ற விளையாட்டுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் நம்பிக்கை கொடுப்பவையாக உள்ளது. அதில் தனித்திறன்களும், குழுவாகத் திறன் வெளிப்பாடும் வெற்றிகளைக் கொடுக்கிறது.
சிறந்த கல்லூரிகளில் சேர்க்கைக்கு உதவி கல்லூரிக் கனவுகளை எளிதாக்குகிறது. அதுபோன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாத குழந்தைகளுக்கு மாற்றாக எதைக் கொடுக்கலாம் என்ற கேள்வியின் பதில்தான் அந்த 100 நிமிடங்கள்.
பள்ளி வேலைநேரம் முடிந்து குழந்தைகள் வீடு சென்றவுடன் பெற்றோர்களின் அலைபேசிகளைத்தான் எடுக்கின்றனர். பெற்றோர்களின் அத்தனைத் திட்டல்களையும், அடிகளையும் அலைபேசிக்காகத் தாங்கிக் கொள்கின்றனர்.
இப்படி வீடு செல்லும் குழந்தைகளை அலைபேசியிடம் இருந்து காப்பாற்றக் கையாண்ட யுக்தியே குழந்தைகளுக்கான அந்த 100 நிமிடங்கள்.
மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப மாலை முழுதும் விளையாட்டு என்பதை மெய்ப்பிக்கவும், வீடு செல்லும் குழந்தைகள் இன்முகத்துடன் செல்லவும் வகுப்பறையின் அசதியைப் போக்கிப் புத்துணர்வு ஊட்டவும் நான் எடுத்துக்கொண்ட முறைகளில் ஒன்று தான் மரபு விளையாட்டுகள்.
மரபு விளையாட்டுகள் என்பவை மண் சார்ந்த விளையாட்டுகள். எந்தவிதப் பொருள் செலவும் இல்லாமல், அலைபேசி தேவைப்படாமல், ரீசார்ஜ் அவசியமில்லாமல் முழுமையான மனநிறைவுடன் தங்கள் சகநண்பர்களுடன் மகிழ்வாக விளையாட உதவுகிறது.
நமது மண்சார்ந்த பல விளையாட்டுகள் இன்று முழுமையாக அழிந்து போயுள்ளன. நாகரிக வளர்ச்சி, நகர்ப்புற உருவாக்கம், தொலைக்காட்சியின் வருகை, அலைபேசியின் அபாரமான வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் இன்று நம் குழந்தைகளின் வளர்ப்பிலும், வாழ்விலும் பல மாற்றங்கள் உண்டாகியுள்ளன. அம்மாற்றங்களின் தாக்கத்தால் கிராமப்புறங்களில் இருந்த பல விளையாட்டுகள் இன்று மறைந்து விட்டன.
ஓட்டாங்கரம், நொண்டி, பல்லாங்குழி, பச்சைக்குதிரை, கண்ணாமூச்சி, உறியடி, கயிறு இழுத்தல், டயர்வண்டி ஓட்டுதல், நொங்கு வண்டி ஓட்டுதல், குலை குலையா முந்திரிக்கா, கோ பிஸ், பம்பரம், ஒரு குடம் தண்ணி ஊத்தி, ராஜாராணி, சம்பா, பூச்சூடிப் போ, எறிபந்து, பரமபதம், தாயம், பன்னாங்கல், குச்சி எடுத்தல், நேர்கோடு, கயிறாட்டம் எனப்பல விளையாட்டுகள் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் விதமாகவும், அவற்றை விளையாடச் செய்யவும் வைக்கப்படுகிறது.
இவ்விளையாட்டுகள் தங்களின் பெற்றோர்கள் அவர்களின் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுகளாகும். இந்த விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடிய பொழுதுகளில் தங்களின் பெற்றோர்களின் வாழ்வியலையும் அக்கால அனுபவங்களையும் பெறுகின்றனர்.
பெற்றோர்களின் இளவயது அனுபவங்களைத் தெரிந்துகொள்வதன் மூலமாக அக்காலகட்டங்களை உணர்கின்றனர். பெற்றோர்களின் வாழ்க்கையை அறியும் குழந்தைகள்தான் சிறந்த குழந்தைகளாக வளர்வார்கள்.
பெண்குழந்தைகள் விளையாடுவது என்பது தற்காலத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த மரபு விளையாட்டுகளை அதிகம் விளையாடுவது பெண் குழந்தைகள் தான்.
இதனால் அவர்களின் உடலும் உள்ளமும் ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டுகிறது. பெண்குழந்தைகளின் மனநலன் காக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் வகுப்பறைகள் கொடுக்கின்ற மனஇறுக்கத்தை உடைத்தெறிய மரபு விளையாட்டுகள் பெரும்துணை புரிகின்றன.
பறவைகள் கூடு திரும்பும் மாலை நேரத்தில் பள்ளியின் மைதானம் குழந்தைகளின் சிரிப்பலைகளில் நிரம்பி இருத்தலை காணுதல் என்பது ஒரு ஆசிரியரின் வரமாகும். அலைபேசியிடம் இருந்து திசைமாற்றி உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வை ஊட்டி நாள்தோறும் இல்லத்திற்கு அனுப்பப்படும் குழந்தைகள் அடுத்தநாளில் மகிழ்வுடன் பள்ளிக்குப் புறப்படுவார்கள்.
இதுபோன்ற விளையாட்டுகளைத் தொடர்ந்து மாணவர்களை பள்ளிநேரம் முடிந்து விளையாட வைப்பதால் அவர்களின் வருகைப்பதிவு அதிகமாக உள்ளது என்பது கல்விக்குரிய சாதகமான அம்சம் ஆகும். இடைநிற்றலும், அடிக்கடி விடுப்பு எடுத்தலும் காணாமல் போய் விடுகிறது.
குழந்தைகளை நாள்தோறும் அலைபேசியிடம் இருந்து 100 நிமிடங்கள் காப்பதாக நான் உணரும் அதே நேரத்தில் நானும் அலைபேசியிடம் 100 நிமிடங்கள் அகப்படாமல் இருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்வாகும்.
இதுபோன்ற மகிழ்வான செயல்களைத் தொடர்ந்து குழந்தைகளுக்குச் செய்வதும், குழந்தைகளுடன் வாழ்வதும் இப்பிறப்பின் பாக்கியமாக உணர்ந்து கொண்டு மைதானத்தில் உள்ள மண்துகள்களோடு நானும் குழந்தைகளின் பாதங்களுக்கு பூக்களாக……இருக்கிறேன்….
நன்றி: பாலமுருகன்.ந, தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கனூர், பொள்ளாச்சி.