Close
பிப்ரவரி 23, 2025 3:56 காலை

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கு பெருகும் ஆதரவு

முல்லை பெரியாறு அணை - கோப்புப்படம்

தேனி மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கு சமீப காலமாக ஆதரவு பெருகி வருகிறது. இதனால் ஒரிரு மாதங்களில் பல போராட்டங்களை நடத்தி தமிழக அரசின் கவனத்தை தங்களின பக்கம் முழுமையாக ஈர்த்துள்ளனர்.

அத்துடன் பெரியாறு அணை பிரச்னையில் கேரள கும்பல் ஒரு அடி எட்டு எடுத்து வைத்தால்,  நாங்கள் பத்து அடி முன்னேறி வருவோம் எனவும் தமிழக விவசாயிகள் நிரூபித்து விட்டனர்.

பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசியல் கட்சிகளும், கேரள விஷம கும்பல்களும் செய்யும் அழிச்சாட்டியம் உச்சநீதிமன்றத்தையே வெறுப்பேற்றி விட்டது. பெரியாறு அணை குறித்து நீங்கள் சொல்லும் காமிக்ஸ் கதைகளை கேட்க நாங்கள் தயாரில்லை. உடனடியாக நாங்கள் சொன்னதை செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடி விட்டது.

என்ன நடந்தாலும் நாங்கள் சட்டத்தையும் மதிக்க மாட்டோம். தர்மப்படியும் நடக்க மாட்டோம்… எந்த நீதி, நேர்மையினையும் பின்பற்ற மாட்டோம். எங்களுக்கு தேவை பணம். அதனை பெரியாறு அணை பிரச்னையை வைத்து தான் சம்பாதிக்கிறோம் என பல விஷமிகள் இதே பிழைப்பாக உள்ளனர். இவர்களை ஏதோ பெரிய போராளிகள் என நம்பி வெளிநாடு வாழ் கேரள மக்களும், உள்ளூரில் உள்ள கேரள விஷம பணக்காரர்களும், தொழிலதிபர்களும், இந்த கும்பல்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்து வருகின்றனர்.

இதனால் இந்த கும்பல் தினம், தினம் ஏதாவது ஒரு அவதுாறு பரப்பி வருகின்றனர். கேரள அரசியல் கட்சிகளும் இக்கும்பல்களின் செயல்பாட்டினை முழுமையாக அனுமதித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் என அத்தனை பேரும் ஒரே மாதிரி நிலைப்பாட்டை தான் எடுத்தனர்.

பெரியாறு அணை பிரச்னையில் இவர்கள் தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்து வருகின்றனர். சட்டப்போர் நடத்தி வெற்றிகளையும் குவித்து வருகின்றனர். கேரள விஷமிகளை பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கமும் கடந்த 30 ஆண்டுகளாகவே பெரியாறு அணை விவகாரத்தில் அறப்போராட்டங்களை தொடர்ந்து  நடத்தி வருகின்றனர்.

செலவுக்கு பணம் இல்லை. குடும்பத்திற்கு நிலையான வருவாய் இல்லை. இருப்பினும் பணத்தின் மீது ஆசை வைக்காமல், தமிழக விவசாயிகளின் நலன் மீது ஆசை வைத்து போராடி வருகின்றனர்.

இதனை தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளும், அரசியல்கட்சிகளும் முழுமையாக கவனித்து வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் தானாக முன்வந்து கேரள விஷமிகளை கண்டித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் பெருகி வந்த ஆதரவு கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் முழுமையாக வெளிப்பட்டது. கடந்த வாரம் கேரள கும்பல் 10 பேர் குமுளி ஒன்னாம் மைலில் போராட்டம் நடத்தினர்.

அதற்கு பதிலடியாக குமுளியில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தில் பல நூறு பேர் குவிந்தனர். இந்த போராட்டம் இதுவரை இல்லாத அளவு பெரும் ஆதரவுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மலையாள மாஃபியாக்களின் விஷம பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியும், குமுளி எல்லையில் வந்து போராடும் மலையாள வலதுசாரி மற்றும் இடதுசாரி கும்பல்களுக்கு எதிராகவும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைத்திருக்கும் ஏழு பேர் கொண்ட கமிட்டியில், இடம் பெற்றிருக்கும் இரண்டு மலையாள அதிகாரிகளை வெளியேற்றக் கோரியும், குமுளி எல்லையான லோயர் கேம்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன் காட்சி கண்ணன் மற்றும் கம்பம் மனோகரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, நில வணிகர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மனோகரன், தாய் தமிழர் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் போடி சுரேஷ், மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் திரளான நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

நில வணிகர் நல சங்கத்தின் சார்பில் அனைத்து நிலை நிர்வாகிகளும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் உசிலை நேதாஜி, பென்னிகுயிக் ஆண்கள் சங்கத்தின் தலைவர் பென்னிக்குயிக் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் அனைத்து நிர்வாகிகளையும் பொன் காட்சி கண்ணன் வரவேற்றார். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் பொருளாளர் ராதாகணேசன், நிர்வாகிகள் மேகமலை ஜெயக்குமார், கூடல் ராஜீவ் காந்தி மற்றும் நிர்வாகிகள், தேவாரம் சுப்பையா, சீலையம்பட்டி காஜா என்ற பழனிச்சாமி, கோட்டூர் ராஜா மற்றும் உப்பார்பட்டி திருப்பதி, கூடல் அழகு தேவர், மருத்துவர் நீல வண்ண நாகராஜா மற்றும் பொறியாளர் சரவணன், கம்பம் அன்புத்தம்பி ரஞ்சித் குமார், கம்பம் தவமணி,  உட்பட பலர் பங்கேற்றனர்.

இப்படி விவசாயிகள் தங்களின் பெரும் பலத்தை காட்டி விஸ்வரூபம் எடுத்து நின்றது உண்மையில் கேரள கும்பல்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீ ஒரு அடி எட்டு எடுத்து வைத்தால்… நாங்கள் 10 அடி முன்னேறி வருவோம் என விவசாயிகள் நிரூபித்து விட்டனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த போராட்டம் ஜனவரி 25ஆம் தேதி நடந்தது. 12 நாட்களுக்குள் அடுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். முல்லை பெரியார் அணை பிரச்சனை என்பது அனைத்து கட்சிகளுக்குமானது அனைத்து உயிர்களுக்குமானது என்பதை அடுத்த போராட்டத்தில் நிரூபிப்போம்.

கூடுதல் நன்றி என் அன்பு தம்பி லெப்ட் பாண்டிக்கு… ஒத்துழைப்பு கொடுத்த  தேனி ஏடிஎஸ்பி, உத்தமபாளையம் உட்கோட்ட டிஎஸ்பி, கூடலூர் காவல் ஆய்வாளர், லோயர்கேம்ப் காவல் துணை ஆய்வாளர் மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், மற்றும் அனைத்து நிலை காவலர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…

எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் எங்களுக்கு தோள் கொடுத்து நிற்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top