மாதம் தோறும் வரும் அஷ்டமி நாட்களில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை தொடங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் சங்கர மடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்குறிப்பு மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்.
இக்கோயிலில் பௌர்ணமி தோறும் நவ ஆவர்ண பூஜை நடத்தப்பட்டு வருகிறது.தற்போது மாதம் தோறும் வரக்கூடிய அஷ்டமி நாட்களில் சகஸ்ர தீப அலங்கார சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இச்சேவை நடைபெறும் நாட்களில் அஷ்டமி தினத்தன்று இரவு 7 மணிக்கு உற்சவர் காமாட்சி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் ஆலய வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அப்போது காமாட்சி அம்பிகையை சுற்றிலும் 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு ஜோதிஸ்வரூபமாய் காட்சியளிப்பார்.
பக்தர்கள் அஷ்டமி நாட்களில் அம்பாளை ஜோதிஸ்வரூபமாய் பார்த்து திருவருள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்.5 ஆம் தேதி முதல் முறையாக சகஸ்ர தீப அலங்கார சேவை தொடங்கப்பட்டதாகவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.