Close
பிப்ரவரி 22, 2025 9:51 மணி

தேனியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டி: ராமநாதபுரம் சாம்பியன்

தேனியில் நடந்த ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராமனாதபுரம் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதில் ஹாக்கி போட்டிகள் போலீஸ் ஆயுதப்படை மைதானத்திலும், போலீஸ் எஸ்டிஏடி விளையாட்டு அரங்கிலும் நடந்தது.
இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 40 அணிகள் பங்கேற்றன. சுமார் 800 வீரர்கள் பங்கேற்ற போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றன. தேனி நகராட்சி (தி.மு.க.,) துணைத்தலைவரும், வக்கீலுமான செல்வம், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் என அத்தனை பேரும் தங்குவதற்கு தேவையான இடவசதி, உணவு வசதி உட்பட அத்தனை முழு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மூன்று நாள் நடந்த விளையாட்டு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடத்திற்கு ராமநாதபுரம் எஸ்டிஏடி அணியும், சிவகங்கை அணியும் பைனலில் மோதின. மதுரை எஸ்டிஏடி அணியும், நெல்லை அணியும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடிக்க மோதின.

தேனியில் நடந்த ஹாக்கி இறுதிப்போட்டியில் ராமநாதபுரம் – சிவகங்கை அணிகள் மோதின.

நெல்லை அணி நான்காம் இடத்தையும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது. சிவகங்கை அணியினை வீழ்த்தி ராமநாதபுரம் அணி சாம்பியன் கோப்பையினை தட்டிச் சென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நகராட்சி துணைத்தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. வடபுதுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் அன்னபிரகாஷ், ஆயுதப்படை டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்சாண்டர், தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top