மதுரை:
திருப்பரங்குன்றம் கோயிலில் மிக காலதாமதமாக அதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தான் பாலாலயம் நடைபெற்றிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஓராண்டு கூட ஆகலாம். மலைமீது ரோப்கார் அமைப்பதற்கான திட்டமிடலும் இன்னும் முடியவில்லை என்று எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
தைப்பூசத்தை முன்னிட்டு உலகெங்கும் இருக்கும் முருக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நானும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கழக உறுப்பினர்களுடன் சாமி தரிசனம் செய்தேன்.
நாங்கள் இங்கு சாமி தரிசனம் செய்யும் அதே நேரத்தில் எடப்பாடியில் எங்கள் பொதுச் செயலாளர் இல்லத்தின் அருகில் இருக்கக்கூடிய சிலுவம்பாளையம் பகுதியில், அவரால் உருவாக்கப்பட்ட கோயிலில் அவரும் சாமி தரிசனம் செய்தார். எங்கள் பொதுச்செயலாளரின் இஷ்ட தெய்வம் முருகன்.
பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி பாதை அமைக்காதது குறித்த கேள்விக்கு:
பால்குடம் எடுத்து அலகு குத்தி வருபவர்களுக்கு தனிப்பாதை அமைத்து சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் இதுதான் வழக்கம். அப்படி செய்யவில்லை என்றால், இனியும் நேரமுள்ளது இனி வரக்கூடிய பக்தர்களுக்காக அப்படி அமைத்து தர வேண்டும். தைப்பூசத்திற்கு அதிக கூட்டம் வரும் என்பதால்தான் இந்த தைப்பூசத்தன்று அரசு விடுமுறையாக எடப்பாடியார் உத்தரவிட்டார்.
கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு:
திருப்பரங்குன்றம் கோயிலில் மிக காலதாமதமாக அதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்த பணிகளை தாமதமான நிலையில் தற்போது தான் பாலாலயம் நடைபெற்றிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஓராண்டு கூட ஆகலாம். மலைமீது ரோப்கார் அமைப்பதற்கான திட்டமிடலும் இன்னும் முடியவில்லை.
முருக பக்தர்கள் மட்டும் இன்றி ஐயப்ப பக்தர்களும் அதிகம் வரக்கூடிய கோயில் என்பதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிரிவலப் பாதையில் நடைபாதை அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்தும், அரசு நிதியில் ஒதுக்குவதற்கும் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ஒரு அரசு பள்ளி மட்டுமே உள்ள நிலையில் போதிய நிதி கிடைத்தால் ஒரு கல்லூரியும் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளோம் என கூறினார்.