நாமக்கல்:
வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை தர மறுத்த டூ வீலர் ஏஜென்சி, வாடிக்கையாளருக்கு, ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராசிபுரத்தை சேர்ந்தவர் சந்திரன், இவரது மனைவி மாதேஸ்வரி (53). இவர், 2021, மார்ச்சில், ஈரோட்டில் உள்ள தனியார் ஏஜென்சியில் ரூ. 63,500 மதிப்பில், ஒரு பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். அதற்குக முன்பணம் ரூ. 10 ஆயிரம் செலுத்தியுள்ளார், மீதி 53,500ஐ, வாகன விற்பனையாளர், தனியார் வங்கி ஒன்றின் மூலம் கடன் ஏற்பாடு செய்து செய்து கொடுத்துள்ளார்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தனது வாகனத்தை பதிவு செய்த பின், அசல் பதிவு சான்றிதழை மாதேஸ்வரி கேட்டார். அப்போது, கடனுக்காக அசல் பதிவு சான்றிதழை வங்கியில் கொடுத்து விடுவோம் என, வாகன விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.
அசல் மற்றும் வட்டி முழுவதும் செலுத்திய பின், வங்கிக்கு சென்று அசல் வாகன பதிவு சான்றிதழை கேட்டபோது, தங்களிடம் சான்றிதழ் இல்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இதனால், வக்கீல் மூலம் சட்ட அறிவிப்பு அனுப்பி பதிவு சான்றிதழை தருமாறு வங்கியில் கேட்டபோதும், அசல் சான்றிதழ் தங்களிடம் இல்லை எனக் கூறி, அசல் பதிவு சான்றிதழில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கடன் குறிப்பு நீக்குவதற்கான படிவத்தை மட்டும் வங்கி நிர்வாகம் வழங்கியது.
வாகன விற்பனையாளரை அணுகி அசல் பதிவுச் சான்றிதழை கேட்டபோது, தாங்கள் வங்கியில் கொடுத்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி, 2024 மே மாதம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வங்கி மற்றும் வாகன விற்பனையாளர் மீது வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர், தீர்ப்பு அளித்தனர்.
அதில், அசல், வாகன பதிவுச் சான்றிதழ் யாரிடம் வழங்கப்பட்டது என்பதற்கான அறிக்கையை, விசாரணையில் ஆர்.டி.ஓ., சமர்ப்பித்துள்ளார். இதில், அசல் பதிவு சான்றிதழை பெற்றுக் கொண்டதாக வாகன விற்பனையாளரின் தரப்பில் கையொப்பம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அசல் பதிவு சான்றிதழை வைத்துக்கொண்டு தர மறுக்கும் விற்பனையாளரின் செயல் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை.
அதனால், 4 வார காலத்துக்குள் அசல் வாகன பதிவுச் சான்றிதழை, வழக்கு தாக்கல் செய்துள்ள மாதேஸ்வரிக்கு, வாகன விற்பனையாளர் வழங்க வேண்டும், மேலும், மாதேஸ்வரிக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.