நாமக்கல் :
விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம் தோறும் அவர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் சமுதாய கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில், நில விவரங்களுடன், விவசாயிகளின் விவரம் மற்றும் நில உடமை வாரியான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிக்குறியீடு எண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.
இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதனால் அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் பெறுவதுடன், ஆன்லைன் மூலம் இண்நெட்டில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்படும்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் முகாம்கள் நடைபெறும் நாட்களில், தங்களின் நில ஆவணங்கள், ஆதார் எண், மற்றும் தொலைபேசி எண் கொடுத்து பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.