Close
பிப்ரவரி 23, 2025 4:32 மணி

போர்க்கொடி தூக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள்..!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையனை முன்னிறுத்தி செயல்பட மேற்கு மண்டல மாஜி அமைச்சர்கள் ரகசிய திட்டம் தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு மண்டலத்தில் மாவட்ட செயலாளர்களாக உள்ள மாஜி அமைச்சர்கள் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கி உள்ளதால் அதிமுக உடையும் அபாயத்தில் உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி கட்சியில் தனக்கு எதிராக யாரும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து வெளியேற்றிய பின்னர் தனக்கு போட்டியாக இருந்த ஓ.பி.எஸ்சையும் வெளியேற்றினார். அதன்பிறகு ஒற்றைத் தலைமை என்ற நிலை வந்ததும் அடுத்த கட்டமாக கட்சியில் தனக்கு நிகராக கருதிய செங்கோட்டையனை மெல்ல ஓரங்கட்டும் வேலையில் இறங்கினார்.

ஜெயலலிதா இருந்தபோது தேர்தல் பிரசார திட்டம் வகுக்கும் முழு பொறுப்பும் செங்கோட்டையனிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது செங்கோட்டையனுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளரைகூட அவருக்கு தெரியாமலேயே அறிவித்து செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியை கொடுத்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்துவதற்காக கள ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக மாநில நிர்வாகிகள், மாஜி அமைச்சர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிலும் செங்கோட்டையனுக்கு, எடப்பாடி பழனிசாமி கல்தா கொடுத்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனின் பேச்சை கேட்டுக்கொண்டு செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நெருங்கிய உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு பதவியை கொடுத்தது செங்கோட்டையனை டென்சன் ஆக்கியது.

கடந்த மாதம் 28ம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். இதில் மாநிலம் முழுவதும் 11 புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

இதில் செங்கோட்டையன் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் மட்டும் 4 நிர்வாகிகள் செங்கோட்டையனின் பரிந்துரை இல்லாமலே நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே எடப்பாடி மீது அதிருப்தியில் இருந்து வந்த செங்கோட்டையனுக்கு, எடப்பாடி பழனிசாமியின் இந்த தன்னிச்சையான அறிவிப்பானது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும், செ.ம.வேலுச்சாமிக்கும் கடும் மோதல் உள்ள நிலையில், வேலுமணியிடம் கலந்தாலோசிக்காமலே செ.ம.வேலுச்சாமிக்கு மாநில பதவியை எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். இது வேலுமணிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கட்சியில் தன்னுடைய விருப்பத்திற்கு தனக்கான ஆதரவு நிர்வாகிகளை நியமிப்பதும், மாநில, மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசிக்காமல் புறக்கணிப்பதும் என தொடர்வதால் மாநிலம் முழுவதும் முக்கிய நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக மேற்கு மண்டலத்தில் மாவட்ட செயலாளர்களான கோவையில் வேலுமணி, ஈரோட்டில் செங்கோட்டையன், நாமக்கல்லில் தங்கமணி, திருப்பூரில் மகேந்திரன் ஆகியோர் கோலோச்சி வருவதால் இந்த இமேஜை உடைத்து தனக்கு தான் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக மேற்கு மண்டல மாஜிக்கள் கருதுகின்றனர்.

இதேபோல பாஜவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் மாஜி அமைச்சர்களில் பெரும்பாலானோர் மீது ஈடி, ஐடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பாஜவுடன் இருப்பது தான் தங்களுக்கு பாதுகாப்பானது என்று கருதுகின்றனர்.

ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி இடையூறாக இருந்து வருகின்றார். இந்த சூழலில் தான் விவசாயிகள் நடத்திய எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்று கூறி கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டு தன்னுடைய எதிர்ப்பை செங்கோட்டையன் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

செங்கோட்டையனின் பின்னணியில் மேற்கு மண்டலத்தில் கே.சி.கருப்பணனை தவிர மற்ற மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர தென் மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்த சில முக்கிய மாஜி அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகளும் செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தி இயங்க முன்வந்துள்ளால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தனக்கு கட்சியில் உள்ள செல்வாக்கினை பயன்படுத்தி தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள செங்கோட்டையன் போன்றோரை ஓரங்கட்ட எடப்பாடி பழனிசாமி ரகசியமாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு நிலையை செங்கோட்டையன் வெளிப்படையாக எடுக்க தொடங்கி உள்ளதால் சசிகலா ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்து ஆலோசித்து வருகின்றனர். செங்கோட்டையனை சந்திக்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோபியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நாட்டாமை நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ளாவிட்டால் கட்சியில் மீண்டும் ஒரு பிளவு என்பது தவிர்க்க முடியாததாகி விடும் என்று செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கூறி வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தன்னிச்சையாக கட்சி பதவிகளை அறிவித்து கட்சியில் செல்வாக்கானவர்களை ஓரங்கட்டி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையனை முன்னிறுத்தி செயல்பட மேற்கு மண்டல மாஜி அமைச்சர்கள் ரகசிய திட்டம் தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் வேலுமணி, ஈரோட்டில் செங்கோட்டையன், நாமக்கல்லில் தங்கமணி, திருப்பூரில் மகேந்திரன் ஆகியோர் கோலோச்சி வருவதால் இந்த இமேஜை உடைத்து தனக்கு தான் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக மேற்கு மண்டல மாஜிக்கள் கருதுகின்றனர்.

செங்கோட்டையனின் பின்னணியில் மேற்கு மண்டலத்தில் கே.சி.கருப்பணனை தவிர மற்ற மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர தென் மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்த சில முக்கிய மாஜி அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகளும் செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தி இயங்க முன்வந்துள்ளால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் நேற்று முன்தினம் இரவு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு நாளை (நேற்று) 11 மணிக்கு கூட்டம் உள்ளதாகவும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து நேற்று காலை கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் நிர்வாகிகள் திரண்டனர். நிர்வாகிகளுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் வெளியே சென்றிருந்த செங்கோட்டையன் சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை பேரூர் சென்றிருந்ததாகவும், கூட்டம் எதுவும் இல்லை எனவும் வழக்கமான நிர்வாகிகள் சந்திப்பு தான் என்றும் கூறினார்.

செங்கோட்டையன் அழைப்பின்பேரில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த நிர்வாகிகள் தரப்பில் சிலர் கூறுகையில், ‘‘எங்களை பொறுத்தவரை கட்சி தலைமை என்பது எங்களுக்கு செங்கோட்டையன் தான். அவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் எப்போதும் கட்டுப்படுவோம்’’ என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top