Close
ஏப்ரல் 19, 2025 6:23 காலை

ராசிபுரம் பகுதியில் ரூ. 9.35 கோடி மதிப்பில் நலத்திட்டப்பணிகள்: அமைச்சர் துவக்கம்..!

ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்தில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன், பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.

நாமக்கல் :

ராசிபுரம் பகுதியில் ரூ. 9.35 கோடி மதிப்பிலான அரசு திட்டப்பணிகளை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

ராசிபுரம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து, மதியம்பட்டி, ஓ.சவுதாபுரம், நடுப்பட்டி, அலவாய்ப்பட்டி, ஆனந்தகவுண்டம்பாளையம், நெ.3 கொமராபாளையம், கார்கூடல்பட்டி, ஆயில்பட்டி, மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, மத்துரூட்டு, மங்களபுரம் மற்றும் முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பஞ்சாயத்துக்களில் ரூ. 2.25 கோடி மதிப்பில் 12 முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் ரூ. 7.10 கோடி மதிப்பில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு அரசு திட்டப்பணிகளை துவக்கி வைத்துப் பேசியதாவது:

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதிலும் மக்கள் அரசிடம் எதிர்பார்க்கும் எந்த ஒரு கோரிக்கையையும் விடுபடாமல் கனிவுடன் ஏற்று பரிசீலித்து உரிய முறையில் தீர்வு கண்டு மக்கள் அனைவரும் மனநிறைவுடன் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக மகளிருக்கு இலவச பஸ் பயணம், மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை, பெண்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ. 1,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை பல்வேறு மாநில முதல்வரும், வெளிநாட்டினரும் பாராட்டி வருகின்றனர்.

அரசின் நலத்திட்டங்களை தகுதியான அனைவரும் பெற்று தங்களின் பொருளாதர நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அட்மா குழுத்தலைவர்கள் ராசிபுரம் ஜெகநாதன், வெண்ணந்தூர் துரைசாமி, நாமகிரிப்பேட்டை ராமசுவாமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top