திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாம் கட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அமைக்கிறது தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாடவீதியில் இரண்டாம் கட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது;
இந்த திருவண்ணாமலை என்பது ஆன்மீக நகரமாகும். 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு திருவண்ணாமலைக்கு வந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒரு வாக்குறுதி அளித்தார். அதாவது திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேரோடும் மாட வீதியில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும் விதமாக கடந்த நிதியாண்டில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள மாட வீதி சாலை 17 கோடி ரூபாயில் கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டது.
தற்போது மீதமுள்ள 1.7 கிலோமீட்டர் தூரம் உள்ள மாட வீதி சாலையை கான்கிரீட் சிமெண்ட் சாலையாக அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையானது சிலிபார்ம் என்ற சிறப்பு வசதிகள் கொண்ட பேவர் மிஷின் மூலம் இந்த சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படும்.
விமான நிலைய ஓடுபாதைகள் அமைக்கப்படும் போது இந்த சிலிப்பாம் பேவர் மெஷினை பயன்படுத்துவது வழக்கம். இந்தப் பணிகள் அனைத்தும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு முன்னர் முடிக்கப்படும்.
திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துணை சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாட வீதியில் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் சில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கார் பார்க்கிங் அமைக்கப்படும் இடம் தேர்வு செய்யப்படும். கார் பார்க்கிங் மையங்கள் அமைக்கப்பட்ட பின் பக்தர்களின் வாகனங்கள் மாடவீதிக்கு வராமல் கார் பார்க்கிங் மையத்தில் நிறுத்தப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி,
தனி அலுவலர் சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மாவட்ட தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் , அருணை மருத்துவ கல்லூரி துணைத்தலைவர் எ.வ.வே.குமரன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் தலைமை குருக்கள் ரமேஷ், மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ், மாநகர துணை மேயர் ராஜாங்கம், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.