வாடிப்பட்டி :
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா, முத்தாலம்மன் கோவில் முன்புறம் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மேற்கூரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது.
முன்னாள் பேரூராட்சித் தலைவர், பேரூர் செயலாளர் ராஜா, பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா, முன்னாள் துணை மேயர் திரவியம்,வில்லாபுரம் ராஜா, எம் எஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சௌந்தரபாண்டி வரவேற்றார்.
இதில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்து பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகருக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அத்தியாவசிய தேவைகளான சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீருக்கான ஆர்.ஓ .பிளான்ட் மற்றும் இங்குள்ள காட்டு நாயக்கர் சமுதாயத்தினருக்கு சுமார் 120 பேருக்கு சாதி சான்றிதழ் பெற்றுக் கொடுத்துள்ளேன். மேலும் உச்சிமா காளியம்மன் கோவிலுக்கு மேற்கூரை அமைக்க கோரிக்கை வைத்துள்ளார்கள் அதையும் நான் செய்த தருவேன்.
எந்த கொம்பனாலும் எங்களை வெல்ல முடியாது என்று தனக்குத்தானே ஸ்டாலின் கூறிக் கொண்டு 200, 200 தொகுதி என கிளிப்பிள்ளையை போல் கூறிக் கொள்கிறார். அதை மக்களிடத்தில் தான் கேட்க வேண்டும் இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?
ஒரு ஐபிஎஸ் அதிகாரி மீது ஒரு பெண் காவலர் புகார் கொடுக்கும் நிலை உள்ளது. அவ்வாறு பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளது. மின்சார கட்டணம் கூடியுள்ளது சொத்து வரி கூடியுள்ளது தேர்தல் வாக்குறுதிகள் என்ன கூறினார்கள்? கேஸ் மானியம் என்றார்கள் நகைக் கடன் தள்ளுபடி என்றார்கள் மாணவர் கல்விக்கடன் தள்ளுபடி என்றார்கள் இதுவரை எதை செய்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். அது எதற்கு?
இதற்கு சீன பழமொழி ஒன்று சொல்வார்கள். மீனைப் பிடித்து கொடுக்காதே தூண்டிலை கொடு மீனை அவர்களே பிடித்துக் கொள்வார்கள். எனவே மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற கருவிகளை வழங்குவதால் அவர்கள் கல்வி அறிவு வளர்ந்து தங்களை மேம்படுத்தி கொள்வார்கள்.
தமிழக வெற்றி கழகம் விஜய்க்கு உள்துறை அமைச்சரால் ஓய்பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய் நல்ல நடிகர் மக்களிடத்தில் செல்வாக்கு மிக்கவர் அவருக்கு இந்த திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சி என்றாலும் பரவாயில்லை. எனவே அவருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தவறில்லை.
ஏனென்றால் விஜய் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அவசியம். இவ்வாறு அவர் பேசினார். இதில் குமார்,முத்துப்பாண்டி, ஜெயராஜ், நாகமலை, பிரவீன், மனோஜ் குமார், முத்துநாயகம், ராஜு, சீனிவாசன் ,செல்லப்பாண்டி, தங்கப்பாண்டி, சரவணன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன் நன்றி கூறினார்.