Close
பிப்ரவரி 21, 2025 10:01 மணி

ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் எதிரொலி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கை..!

நாமக்கல் அருகே உள்ள கோழிப்பண்ணையில், பணியாளர் ஒருவர் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நாமக்கல் :

ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே ஆந்திர மாநில பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டலத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதியில் சுமார் 1,000க்கும் அதிகமான முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன.

இங்கு 5 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க கோழிகளுக்கு கிருமிநாசினி தெளித்தல், பயோ செக்யூரிட்டி முறைகளை கடைபிடித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை எனினும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top