நாமக்கல் :
தமிழக முதல்வர் பாஜவுக்கு எதிராக இஸ்லாமிய்ர்களை திருப்பி விட வேண்டாம் என பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேசினார்.
நாமக்கல் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகில், கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரசார பிரிவு மாநிலத் தலைவர் குமரி கிருஷ்ணன் முன்னிலை வகித்துப் பேசினார். கட்சியின் மாநில துணைத் தலைவரும், மாவட்டப் பொறுப்பாளருமான வி.பி. துரைசாமி நிகழ்ச்சியில் பேசியதாவது;
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு பாஜவுக்கு எதிராக இஸ்லாமியர்களை திருப்பிவிட முயற்சிக்கிறது. உலகில் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்கின்ற 22 நாடுகள் இந்திய பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர் என பட்டம் வழங்கி உள்ளனர். அமெரிக்க டிரம்ப் பிரதமர் மோடியை அழைத்துப்பேசி, அமெரிக்காவிற்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும்,
நீங்கள் உலக தலைவர் என ஏற்று கொண்டேன் என கூறியுள்ளார். நாமக்கல் மத்தியில் ஒரு பாறை அமைந்துள்ளது. அதில் உள்ள மலைக்கோட்டை மேல் முஸ்லிம்களின் தர்கா அமைந்துள்ளது, மலையின் கீழ் பகுதியில் நரசிம்மர் கோயில், ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் போல் ஒரு நாளும் நாமக்கல்லில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் சண்டை போட்டது கிடையாது.
அதே நேரத்தில் உயர்ந்து நிற்கின்ற நாமக்கல் ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் அந்த கோயில் உள்ள பகுதியிலும், ஏராளமான முஸ்லிம்கள் மத நல்லினக்கத்துடன் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பாஜவுக்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டிவிடும் வேலையை முதல்வர் கைவிட வேண்டும். திமுக இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது, இந்தியை படிக்க வேண்டும் என மோடி அரசாங்கம் சொல்லவில்லை,
வற்புறுத்தவில்லை, திணிக்கவில்லை மாறாக அவர்கள் விரும்புகின்ற மொழிகளை கூடுதலாக கற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பாஜக நிர்வாகிகள் வக்கீல் மனோகரன், லோகநாதன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.