Close
பிப்ரவரி 22, 2025 7:46 மணி

அருப்புக்கோட்டையில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..!

புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் மூர்த்தி

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-

இந்த நாள் நம்முடைய திருச்சுழி தொகுதியினுடைய வரலாற்றில் குறிப்பாக நம்முடைய ம.ரெட்டியப்பட்டி பகுதியின் உடைய வரலாற்றில் மிக மிக முக்கியமான நாளாக நான் கருதுகிறேன். கனவு மெய்ப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒரு கனவு நினைவாகிறது என்கின்ற வகையில் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்த பகுதியின் கனவாக இருந்த இந்த சார் பதிவாளர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

ஒரு நீண்ட பயணம் அது. இடைப்பட்ட காலத்தில் பல்வேறு நபர்களின் கோரிக்கையாக இருந்தாலும், நிர்வாக காரணங்களால் அது தள்ளிப் போய் கொண்டு இருந்தது. உதவி தேவைப்படக்கூடிய காலத்தில் சரியான நேரத்தில் செய்யக்கூடிய அந்த உதவிதான் இந்த உலகத்தை காட்டிலும் பெரியதாக இருக்கும் என்று சொல்வதைப் போல, நம்முடைய பகுதி மக்கள் நன்மைக்காக ஒவ்வொரு முறையும் பந்தல்குடிக்கும், பெருநாழிக்கும்,

கமுதிக்கும் அழைந்து கொண்டிருக்கக்கூடிய அந்தக் கஷ்டத்திலிருந்து உங்களுக்கு அருகாமையிலேயே அதனை உருவாக்குவதற்கு நம்முடைய மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்
பதிவுத்துறை அமைச்சர் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு இந்த சார் பதிவாளர் அலுவலகத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

இதனை சட்டமன்றத்தில் அறிவித்ததோடு தொடர் முயற்சியின் காரணமாக, இந்த கோப்பிற்கு பல்வேறு விதிவிலக்குகள் தேவை என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு, இந்த பகுதிக்கு தேவை என்பதை உணர்ந்து இன்றைக்கு அவற்றுக்கெல்லாம் விலக்குகளை அளித்து நமது நீண்ட கால கனவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

அரசுக்கு வணிகவரித் துறையின் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கின்றது. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் வணிகவரிகளை, ஜிஎஸ்டி வசூலில் எல்லா மாநிலங்களை காட்டிலும் மிக அதிகமான அளவில், நம்முடைய மாநிலத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் வரி வருவாய் ஈட்டி தறக்கக்கூடிய பெருமை இந்த துறைக்கு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பதிவுத்துறை பெற்றிருக்கக் கூடிய வளர்ச்சி மிகப் பெரியது.

தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு மிகப்பெரிய கட்டமைப்பு உருவாக்கி தருகிறது. தமிழ்நாட்டினுடைய பழைய கட்டிடங்களுக்கு எல்லாம் ஒரு புதுப்பொழிவை உருவாக்குகிறது. தொடர்ச்சியாக நம்முடைய பதிவுத்துறைகளில் இயங்கி கொண்டிருக்கக் கூடிய கட்டிடங்களுக்கெல்லாம் புதிய கட்டிடங்களை நவீன வசதிகளோடு செய்யப்பட்டு வருகிறது.

நம்முடைய பகுதி வளர வேண்டிய பகுதி இன்னும் வளர்வதற்கும், இந்த பகுதியினுடைய பல்வேறு வளர்ச்சிக்கும், இப்பகுதியினுடைய மக்களின் நலத்திற்கும் இந்த பகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

விருதுநகர் பதிவு மாவட்டத்தில் புதிதாக தோற்றுவித்து, திறந்து வைக்கப்பட்டுள்ள ம.ரெட்டியபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருச்சுழி சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட 18 கிராமங்கள் மற்றும் பந்தல்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட 3 கிராமங்கள் ஆக மொத்தம் 21 கிராமங்கள் புவியியல் அமைப்பின்படி தொடர்ச்சியாக அமைந்துள்ளன. ம.ரெட்டியபட்டி கிராமம் திருச்சுழி சார்பதிவாளர் அலுவலகத்தின் அதிகார எல்லையில் அமைந்துள்ள மண்டபசாலை என்ற முதன்மை கிராமத்தில் அமைந்துள்ளது.

விருதுநகர் பதிவு மாவட்டத்தில் திருச்சுழி மற்றும் பந்தல்குடி சார்பதிவகங்களில் அமைந்துள்ள ஆலடிப்பட்டி, இறைசின்னம்பட்டி, காளையார்கரிசல்குளம், கல்லூரணி, கல்யாணசுந்தரபுரம், மண்டபசாலை, முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, பரட்டநத்தம், பொம்மக்கோட்டை, ஆர்.கல்லுமடம், சிலுக்கப்பட்டி, சுண்டக்கோட்டை, தம்மநாயக்கன்பட்டி, வேடநத்தம், குருணைக்குளம், கொங்கணக்குறிச்சி, கருப்புக்கட்டியேந்தல், மறவர்பெருங்குடி, தும்முச்சின்னம்பட்டி மற்றும் சலுக்குவார்பட்டி ஆகிய 21 கிராமங்களை கொண்டு ஆ.ரெட்டியபட்டியில் புதியதாக சார்பதிவாளர் அலுவலகம் தோற்றுவிக்கப்படுகிறது
இந்த 21 கிராமங்களும் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ம.ரெட்டியபட்டி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அருகே, அமைந்துள்ளதால் மக்கள் எளிதாக விரைந்து ஆவணங்களை பதிவு செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதி மிக வேகமாக எல்லா வசதிகளையும் பெற வேண்டும் என்ற அடிப்படையில், நிதித்துறை அமைச்சர் பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப்பகுதிக்கு பல்வேறு அரசின் விதிவிலக்குகளை பெற்று இன்று சார் பதிவாளர் அலுவலகம் திறந்து வைக்கப்
பட்டுள்ளது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளில் முன்மாதிரி தொகுதியாக இப்பகுதி மக்களுக்காக அரசின் விதிவிலக்குகளை பெற்று அவருடைய தொகுதியை உருவாக்கிக்; கொண்டிருக்கிறார்கள். என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

இந்த இடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் வர வேண்டும் என்றால் அதற்கென்று அரசு விதிமுறைகள் உண்டு. மக்கள் தொகை, ஒவ்வொரு நாளும் சராசரியாக நடத்தக்கூடிய பத்திரப் பதிவினுடைய எண்ணிக்கை அடிப்படையில் தான் புதிய அலுவலகங்களை திறப்பதற்கு அரசு ஆணையிடும். ஆனால் இது போன்ற இந்த பகுதியினுடைய அடிப்படை தேவைகள்; அனைத்துக்கும் இந்த பகுதிக்கு விதிவிலக்குகள் பெற்றுத் தந்து புதிய அலுவலகங்களை நமது அமைச்சர் பெருமக்கள் அவர்களுடைய முயற்சியால் தொடர்ச்சியாக திறக்கப்பட்டு
வருகிறது.
.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆர்.ஜனார்த்தனம், துணைப்பதிவுத்துறைத் தலைவர், இராமநாதபுரம் மண்டலம்செ.செந்தமிழ்செல்வன், மாவட்ட பதிவாளர்(தணிக்கை) திரு.குணசேகரன், மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்)திரு.த.பூபதி, சார் பதிவாளர்கள் அய்யரப்பன்,மாரிமுத்து, செந்தில்ராஜ்குமார்,
சேக் அப்துல்லா, சுப்பிரமணியன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், பத்திரப்பதிவு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top