வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக 4,864 பயனாளிகளுக்கு 4,085 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றது.
தென்காசி நகரப் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான இடங்கள் குறித்து இன்று ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தமிழக முதல்வர் தென்காசிக்கு வரும் போது அதற்கான அடிக்கல் நாட்ட ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தாங்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு செல்வதற்கு காரணம் எம்ஜிஆருக்கு அடுத்து அதிமுகவில் நல்ல தலைவர்கள் இல்லை என்பதால் தான் திறமையான தலைவரான கலைஞர் வழியில் நாங்கள் சென்றோம் எனவும், தாங்கள் பஞ்சத்தில் திமுகவிற்கு வந்தவர்கள் அல்ல எனவும், திமுகவிற்கு வந்து பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அதிமுக, திமுக என எங்களை பிரிக்க வேண்டாம் எனவும், எங்கள் உடம்பில் ஓடுவது திமுக ரத்தம் தான் எனவும் அவர் பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலைமையில் உள்ள நிலையில் விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், நீண்ட காலமாக தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.