நாமக்கல் :
நாமக்கல் அருகே தூசூரில், அதிகாலை நேரத்தில், மூதாட்டியிடம் 5 பவுன் தங்க தாலி செயினை பறித்துச் சென்று மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல் அடுத்த தூசூரைச் சேர்ந்தவர் கதிர்வேல் (72), விவசாயி. அவரது மனைவி காமாட்சி (65). நேற்று அதிகாலை, 4 மணிக்கு, காமாட்சி வீட்டுக்கு வெளியே வந்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த மர்ம நபர், திடீரென பாய்ந்து, காமாட்சியின் வாயைப் பொத்தி, பின் பக்கம் உள்ள மாட்டுக் கொட்டகைக்கு இழுத்துச் சென்றார். அங்கு, காமாட்சி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். அதிர்ச்சி அடைந்த காமாட்சி திருடன் திருடன் என சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர்.
அவரது வீட்டிற்கு பின் பக்கம் முட்புதர்கள் நிறைந்து காடாக இருப்பதால், அவ்வழியாக தப்பிச் சென்ற மர்ம நபரை பிடிக்க முடியவில்லை. மர்ம நபர், சட்டை அணியாமல் குண்டாக இருந்ததாக காமாட்சி தெரிவித்தார். தகவல் அறிந்த நாமக்கல் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து தங்க தாலி செயினை பறித்துச்சென்ற மர்ம நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.