Close
பிப்ரவரி 20, 2025 2:07 காலை

பழங்குடி மாணவர்கள், கர்ப்பிணிகள் பயணம் செய்ய இலவச ஆட்டோ சேவை : 2 ஆட்டோ வழங்கிய நிறுவனம்..!

பழங்குடி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இலவசமாக பயணிக்க வழங்கப்பட்டுள்ள ஆட்டோக்கள்

மெய்யூர் ஊராட்சியில் பள்ளி செல்லும் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இரண்டு ஆட்டோக்களின் சேவையை திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம்,மெய்யூர் ஊராட்சி, குருபுரம் கிராமம்,யுரேகா நகர் பகுதியில் பழங்குடி மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,இப்பகுதியில் வசித்து வரும் 17 பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல பஸ் வசதி இல்லாமல் கல்வி பயில மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், இவர்கள் பள்ளிக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர்.மேலும், இப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது உடல் பரிசோதனைக்கு கச்சூர் மற்றும் பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வர மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் மாதந்தோறும் உடல் மற்றும் ஸ்கேன் பரிசோதனையை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வதில்லை. இந்நிலையில்,இவர்களது அவல நிலையை அறிந்த எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்டு நிதி உதவியுடன் பிரிட்டி லில் ஹார்ட்ஸ்,குளோபல் ஸ்கூல்ஸ் குரோத் போர்ம் ஆகிய அமைப்புகள் இணைந்து இரண்டு ஆட்டோக்களை இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கினர்.

இந்த ஆட்டோக்களை இப்பகுதி பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று வரவும்,கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது உடல் பரிசோதனை செய்து கொள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று வரவும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆட்டோவில் ஒரு பெண் ஓட்டுனரும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில்,இரண்டு ஆட்டோக்களை இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சி இக்கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,பிரிட்டி லில் ஹார்ட்ஸ் நிறுவனர் லியோ ஆகாஷ் ராஜ் தலைமை தாங்கினார்.

எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்டு நிறுவனத்தைச்சேர்ந்த சவிதாராமன்,நிக்கோலா பவுண்டேஷன் நிறுவனர் சுந்தரபாண்டி செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அனுரத்னா கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.இதில், சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.

இதன் பின்னர்,இரண்டு இலவச ஆட்டோக்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதன் பின்னர்,50 பெண்களுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் மதன்குமார், வேல்முருகன்,விஜயகாந்த், நாட்டான்மை ரவி, பொதுமக்கள்,கிராம முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக அனைவரையும் அரவிந்த் கிருஷ்ணன் வரவேற்றார். முடிவில்,ஜி.பி.பீட்டர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top