நாமக்கல் :
விற்பனை செய்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கம்பெனியில் இருந்தே லாக் செய்த, ஓலா நிறுவனம் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லை சேர்ந்தவர் சுதேஸ்வரன், பார்மசி படித்துவிட்டு தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 24ம் தேதி ஆன்லைன் மூலம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ரூ. 87,548 செலுத்தி வாங்கியுள்ளார்.
அப்போது, வாடிக்கையாளரின் வீட்டிலேயே ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2024 அக்டோபர் முதல் வாரத்தில் ஸ்கூட்டரை அருகில் உள்ள ஓலா ஷோரூமில் பெற்றுக் கொள்ளுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கூட்டரைப் பெற்றுக்கொள்ள ஷோரூம் சென்ற சுதேஸ்வரன் அவர்கள் கூறிய கம்பெனியில் வண்டிக்காக இன்சூரன்ஸ் மற்றும் டெலிவரி கட்டணம் ரூ. 4,280 செலுத்தி கடந்த நவம்பர் மாதம் வாகனத்தை டெலிவரி பெற்று ஓட்டிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று நாமக்கல் ஓலா ஷோரூமில் இருந்து தொலைபேசியில் சுதேஸ்வரனை அழைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்க்கான மானிய தொகை பெறுவதற்கு நேரில் வந்து புகைப்படம் எடுத்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சுதேஸ்வரன் ஷோரூமுக்கு சென்று விவரம் கேட்டபோது மானியத்தொகை கம்பனிக்கு கிடைக்கக் கூடியது என தெரிவித்துள்ளனர். இந்த நிபந்தனை எதுவும் வாகனத்தை வாங்கும்போது தெரிவிக்கப்படவில்லை என்று கூறிவிட்டு, சுதேஸ்வரன் வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஓலா பிரதிநிதிகள் 2 நாட்களுக்குள் வந்து மானியத் தொகை நடைமுறையை முடிக்க விட்டால் வண்டியை லாக் செய்து விடுவோம் என்று எச்சரித்துள்ளனர். ஆனால், இவ்வாறு தெரிவித்த மறுநாளே ஸ்கூட்டரில் சுதேஸ்வரன் சென்று கொண்டிருந்தபோது ஓலா நிறுவனத்திடம் உள்ள சென்சார் கட்டுப்பாடு மூலம் வண்டியை லாக் செய்து விட்டனர்.
இது குறித்து நாமக்கல் ஷோரூமுக்கு பேசியும் அவர்கள் வாகனத்தை அன்லாக் செய்ய மறுத்து விட்டனர். இதனால் ஸ்கூட்டரை வேறு வாகனம் மூலம் வீட்டுக்கு சுதேஸ்வரன் எடுத்துச்சென்றார்.
வாகனத்தை விற்றுவிட்டு, விற்பனையாளரிடம் உள்ள சென்சார் கட்டுப்பாட்டு கருவி மூலம் எவ்வித அறிவிப்பும் வழங்காமல் வாகனத்தை லாக் செய்தது தவறு என்றும், ஓலா நிறுவனத்தின் செயல் நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும்,
இதனால் வாகனத்தை எடுத்துக் கொண்டு செலுத்திய பணத்தை திரும்பத் தருமாறும், ஓலா நிறுவனத்தின் நேர்மையற்ற வணிக நடைமுறையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ. 5,00,000 இழப்பீட்டை தமக்கு வழங்க வேண்டும் என்றும் சுதேஸ்வரன் நேற்று நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் தம்மை போல பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான நுகர்வோர்களுக்கு இழப்பீடாக ரூ. 100 கோடி ஓலா நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், அதனை நுகர்வோர் நலநிதியில் செலுத்தி தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் புகாரில் கேட்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நுகர்வோர் கோர்ட், 48 மணி நேரத்தில் சுதேஸ்வரனின் ஸ்கூட்டர் இயங்கும்படி சென்சார் லாக்கை நீக்க வேண்டும் என்று நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும், ஓலா நிறுவனத்துக்கும், ஓலா நிறுவனத்தின் குமாரபாளையம் மற்றும் நாமக்கல் கிளைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும், அவர்கள் வரும் மார்ச் 13 அன்று பதிலளிக்கவும் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.