Close
பிப்ரவரி 23, 2025 2:00 காலை

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் முகாம் : கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் கலெக்டர் உமா கலந்துகொண்டு, ஜேடர்பாளையம் அருகே 17 ஆடுகள் இறந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவருக்கு ரூ. 51 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார்.

நாமக்கல் :

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 4 பயனாளிகளுக்கு, ரூ. 3.26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 510 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.35,000 வீதம் ரூ.70,000 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2.05 லட்சம் மதிப்பில் விபத்து மரண உதவித்தொகை மற்றும் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு ஆகிவற்றை வழங்கினார்.

மேலும், கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ஜேடர்பாளையம், வடகரையாத்தூர் மேல்முகம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகள் இறந்ததற்கு இழப்பீடாக, ரூ. 51,000க்கான நிவாரண உதவியை கலெக்டர் வழங்கினார்.

மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.3.26 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட டிஆர்ஓ சுமன், சிப்காட் டிஆர்ஓ சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட சப்கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top