Close
பிப்ரவரி 22, 2025 9:43 மணி

பறவைக்காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..!

நாமக்கல்லில் நடைபெற்ற பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில், விழிப்புணர்வு கையேட்டை கலெக்டர் உமா வெளியிட்டார்.

நாமக்கல் :

நாமக்கல் பகுதிக்கு பறவைக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பது குறித்து, கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையெட்டி நாமக்கல் கலெக்டர் ஆபீசில் பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

பறவைக்காய்ச்சல் நோய் வரவிடாமல் தடுக்க கோழிப் பண்ணையாளர்கள் கோழிப்பண்ணைக்குள் இதர கோழிகள் அல்லது பறவைகள் நுழைவதை தடுக்க வேண்டும். அனைத்து கோழிகளையும் உற்பத்தி முடிந்து, கழிவு செய்த பின்னரே புதிதாக குஞ்சுகள் வாங்க வேண்டும். பண்ணையினுள் மனித நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருத்தல் வேண்டும்.

கண்டிப்பாக பார்வையாளர்களைப் பண்ணைக்குள் அனுமதிக்கக் கூடாது. பண்ணையினுள் நுழையும் வாகனங்களின் சக்கரங்கள் மீது கிருமி நாசினி கலந்த நீரை விசைத்தெளிப்பான் மூலம் தெளித்த பின்னரே பண்ணையினுள் அனுமதிக்க வேண்டும். பண்ணை வேலையாட்கள் கையுறைகள், முகமூடி மற்றும் ரப்பர் காலுறைகள் அணிந்து வேலை செய்ய வேண்டும்.

பண்ணையினுள் நுழையும்போதும், வேலை முடிந்து வெளியே செல்லும்போதும் கை, கால்களை கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்த பின்னர் உடைகளையும் மாற்றி விட்டுச் செல்லவேண்டும். 15 நாட்களுக்குகொரு முறை பண்ணை வளாகத்தை முற்றிலும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

கோழி எச்சம் உள்ள இடங்களில் சிறுவர்களை விளையாட விட வேண்டாம். கோழி வளர்க்கும் இடங்களில் செருப்பு போடாமல் நடக்க வேண்டாம். கோழிக்கூண்டு சுத்தம் செய்யும்போது மூக்கின் மீது துணிக்கட்டி மூடிக்கொள்ளவும். சுத்தம் செய்த பின்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுங்கள் என கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து, கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பழனிவேல், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட திரளான கோழிப்பண்ணையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top