உசிலம்பட்டி:
மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடந்த குளறுபடிகளால் வட்டாட்சியரே புலம்பும் நிலை உருவானது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. உசிலம்பட்டி நகராட்சி, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத சூழலில் இத்துறை சார்ந்த விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலை உருவானது.
மேலும், இக்கூட்டத்தில், ஒவ்வொரு முறையும், விவசாயிகளை தவிர்த்து அரசியல் கட்சியினரும், விவசாய சங்கங்களின் நிர்வாகிகளுமே அதிகமாக கலந்து கொண்டு கேள்விகள் கேட்பதால் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயம் சாராத கேள்விகளையும் அடிக்கடி முன் வைத்து கூட்டத்தை குழப்பி வருவதாக வட்டாட்சியர் பாலகிருஷ்ணனும் புலம்பும் நிலை உருவானது.
மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்ள நடவடிக்கைகள் எடுப்பதோடு, விவசாயிகள் அதிகம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.