சோழவந்தான் :
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.
இந்த கோவிலில் தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர் இந்த நிலையில் கோயிலின் முன்பு, மூன்று மாதக் கொடி கம்பம் அருகில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த இந்த பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் லோடு வாகனங்களை மூன்று மாதக் கொடி கம்பம் அருகில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதன் காரணமாக எதிரெதிரே வரும் பேருந்துகள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மேலும் கோயிலுக்கு வழிபாட்டுக்காக வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மூன்று மாதக் கொடி கம்பத்தை சுற்றி வந்து சாமி கும்பிடுவதில் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். வாகனங்களை நிறுத்துவர்களிடம் இது குறித்து கேட்டால் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஆகையால் சோழவந்தான் காவல் துறையினர் காவலர்களை நியமித்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு சில மாதங்களில் வைகாசி திருவிழாவிற்கான மூன்று மாத கொடியேற்றம் நடைபெற உள்ளதால் வரும் காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இந்த சூழ்நிலையில் தற்போதே காவல்துறையினர் இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரிய கடை வீதி முதல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை கடை முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான் காவல் துறையினர், சோழவந்தான் நகரில் அய்யமார் பொட்டல், மாரியம்மன் கோயில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற ஆர்வம் காட்டவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.