வாலாஜாபாத் அருகே லாரி ஓட்டுநரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலவாக்கம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் நலச் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட தோண்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன், வயது, 37 என்பவர் கனரக லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 19 ஆம் தேதி காலையில் வாலாஜாபாத் அருகே சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் லோடு ஏற்ற ரயில்வே கேட் அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிரே காரில் வந்த சங்கராபுரம் கிராமத்தை வெங்கடேஷ் என்பவருக்கும், லாரி ஓட்டுநர் பார்த்திபனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிறகு, பார்த்திபன் லாரியில் லோடு ஏற்றுக்கொண்டு திரும்பிய போது வெங்கடேஷ் அவருடைய வீட்டருகே லாரியை நிறுத்தி பார்த்திபனை வாகனத்தை விட்டு கீழே இறங்கச் சொல்லி பார்த்திபனை வெங்கடேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பார்த்திபன் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் நல சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
அதனால் நடந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் நலச்சங்கத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
அதைத்தொடர்ந்து, பார்த்திபனை தாக்கிய வெங்கடேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் நலச்சங்கத்தை சேர்ந்த சக ஓட்டுநர்கள் திரளாக ஒன்று கூடி சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.