நாமக்கல் :
விரைவில் தமிழகத்திலும் பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் டாக்டர் ராமலிங்கம், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரலாற்று சாதனையாக நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார். 2047-ல் சுதந்திர இந்தியாவின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது இந்தியா அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வல்லரசு நாடாகும் வகையில் மத்திய அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்தத்தேவையில்லை. வேளாண்மை, தொழில் வளம், கல்வி, விஞ்ஞானம் என பல துறைகளுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சிக்கு மட்டும் ரூ. 11 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்கின்ற, இரட்டை இன்ஜின் ஆட்சி இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும். அந்த வகையில், டில்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் பாஜ ஆட்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
தமிழகத்திலும் அவ்வாறான ஆட்சி மாற்றம் வரவேண்டும் என இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர். விரைவில் தமிழகத்தில் பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும். அப்போது, தற்போது தடைபட்டுள்ள அனைத்து திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழும்.
தேசிய புதிய கல்விக்கொள்கை இந்தியாவின் பிரபல அறிஞர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் இளைஞர்களும், இளைஞர்களும் முழுமையான கல்வியறிவை பெற இந்த திட்டம் மிகவும் உவும். இதில் உள்ள மும்மொழிக் கொள்கையை பொருத்தமட்டில், ஹிந்தி மொழியை தான் சேர்க்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.
3-வது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் எடுத்து படிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். தமிழதத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான மாணவர்கள், 3வது மொழியைப் படிக்கும்போது, ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் 2 மொழிதான் கற்றுத்தருவோம் என தமிழக அரசு கூறுவது ஏணை மாணவர்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் கல்விக்கான மத்திய அரசு நிதி ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய முடியாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.