நாமக்கல் :
தமிழகத்தில் ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வால் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிஏஐ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா (பிஏஐ) சார்பில், இந்திய கட்டுனர்கள் தினம், நாமக்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பிஏஐ தேசிய தலைவர் விஸ்வநாதன், மாநில தலைவர் பழனிவேல், நாமக்கல் மைய தலைவர் தென்னரசு ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்கள்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலைகள் 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய அரசின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முடிக்க வேண்டிய அரசின் கட்டுமான பணிகள் அடுத்தாண்டுக்கு கொண்டு சென்றால் கான்ட்ராக்டர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இப்பிரச்சினைகளுக்கு தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் அதிகமான மணல் குவாரி மற்றும் கிரசர்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும்.
தற்போது செயல்படும் குவாரிகளில் கூடுதலாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும், அவ்வாறு அனுமதி அளித்தால் மட்டுமே விலை குறையும், தற்போது ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வால் தமிழக அரசின் கனவு இல்ல கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்களின் விலை உயர்ந்துள்ளதால் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு காண்ட்ராக்டர்கள் அரசின் கட்டுமான பணிகளை நிறுத்தி வேலை செய்யாமல் உள்ளனர், கட்டுநர்கள் சங்கம் சார்பில் கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்களின் விலைவாசி உயர்வு குறித்து அரசு அதிகாரிகளிடம் பல கோரிக்கை மனுக்கள் அளித்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
அதிக அளவில் குவாரிகளை இயக்க முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசு ஆற்று மணல் குவாரிகளை திறந்து, நேரடியாக மணல் வழங்கினால் மணல் விலை குறையும். இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினார்கள்.