நாமக்கல் :
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த மாதம் 18ம் தேதி ரூ. 4.40 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 25 பைசா உயர்ந்து ரூ. 4.65 ஆனது. 20ம் தேதி 10 பைசா உயர்ந்து ரூ. 4.75 ஆனது. 22ம் தேதி மீண்டும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.80 ஆனது. இந்த நிலையில், இன்ற மாலை என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 500, பர்வாலா 457, பெங்களூர் 490, டெல்லி 472, ஹைதராபாத் 430, மும்பை 495, மைசூர் 490, விஜயவாடா 465, ஹொஸ்பேட் 440, கொல்கத்தா 520.
கோழிவிலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 96 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 77 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.