திண்டுக்கல்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கூட்டுறவுத் துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி , திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் உயிர்காக்கும் மருந்துகள், மிகப் பயனுள்ள மருந்துகள் மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் கூட்டுறவுத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 1000 “முதல்வர் மருந்தகங்கள்“ இன்று திறந்து வைத்துள்ளார்கள்.
முதல்வர் மருந்தகங்களுக்கான மருந்துகள் கொள்முதல் என்பது மருந்துகள் உற்பத்தி செய்கின்ற இடத்திலேயே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, இடையீட்டாளர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யப்படுவதால் இந்த அளவிற்கு குறைந்த விலையில் மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் இரா.சக்திவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவார் சி.குருமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, வட்டாட்சியர் ஜெயபிரகாஷ்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.