நாமக்கல் :
நாமக்கல் கமலாலயக் குளத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 12ம் தேதி தெப்பத்தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும் என ராஜ்யசபாம் எம்.பி. ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையியின் அருகில், புராண சிறப்புப் பெற்ற கமலாலயக்குளம் உள்ளது. இந்த குளத்தில் 100 ஆண்டுகளுக்குப்பிறகு தெப்பத்தேர் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் தெப்பத்தேர் திருவிழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது குப்பைகள் அகற்றவும் பொதுமக்கள் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்படுகள், பொது சுகாதாரம் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழத்தில் உள்ள பழம்பெரும் கோயில்களில் திருப்பணிகள் நடத்தவும், தடைபட்ட திருவிழாக்களை நடத்தவும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, புராண சிறப்பு மிக்க நாமக்கல் கமலாலயக்குளத்தில், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற 12ம் தேதி மாலை 5 மணிக்கு தெப்பத்தேர் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்துசமய அறநிலையத்துறை மூலம் செய்யப்பட்டு வருகிறது.
விழாவில் நாமக்கல் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என கூறினார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.