108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், சத்ய விரத ஷேத்திரம் என
அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், திருவெஃகா, பெரிய பெருமாள் என அழைக்கப்படும்,ஸ்ரீ கோமளவள்ளி நாயகா சமேத ஸ்ரீ யதோத்த காரி பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
பங்குனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெரிய பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ யதோத்த காரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி பச்சை பட்டு உடுத்தி, திருவாபரணங்கள்,மல்லிகை பூ, கொடி சம்பங்கி பூ, பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து கொடி மரத்தருகே எழுந்தருள செய்து
துப,தீப, ஆராதனைகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து கருடாழ்வார் உருவம் குறித்த கொடிக்கு கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளம் முழங்க கருடாழ்வார் கொடியை கொடி மரத்தில் ஏற்றி வைத்து பிரமோற்சவத்தை துவக்கி வைத்தனர்.
பிரம்மோற்சவம் தொடங்கியதைத் தொடர்ந்து முதல் நாள் உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன்ஸ்ரீ யதோத்த காரி பெருமாள் சப்பர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா, கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் நாளை மறுநாள் 24-03-25 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.