Close
மார்ச் 30, 2025 12:31 மணி

சோழவந்தானில் தடை செய்யப்பட்ட கிரில் சிக்கன் உணவகத்துக்கு மீண்டும் அனுமதி : பொதுமக்கள் கொந்தளிப்பு..!

கிரில் சிக்கன் -கோப்பு படம்

பொதுமக்களின் உயிருடன் விளையாடும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட தனியார் உணவகத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட மூன்று வயது குழந்தை உட்பட 10க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் சோழவந்தானில் கூடை பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டதில் அவர்களின் உடல்நிலையில் தற்போது வரை முன்னேற்றம் காணப்படாத நிலை இருந்து வருகிறது.

குறிப்பாக இந்த பகுதியில் உள்ள அதிமுகவின் முக்கிய பிரமுகரின் மகன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் உணவகத்தை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் உணவகத்தை திறப்பதற்கு அனுமதி அளித்து உணவகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளில் கடை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வருகிறது.

இது குறித்து பொதுமக்களில் சிலர் கூறுகையில் தனியார் உணவகத்தில் விற்கப்பட்ட கிரில் சிக்கனால் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறைந்த கால இடைவெளியில் மீண்டும் அதே உணவகத்தை திறப்பதற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எந்த அடிப்படையில் அனுமதி அளித்தார்கள்?

இது பொதுமக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரிகளின் போக்காகவே பார்க்கப்படுகிறது ஆகையால் சோழவந்தாில் இது போன்ற கிரில் சிக்கன் விற்கப்பட்டு வரும் கடைகளில் உடனடியாக மதுரை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கிரில் சிக்கன் விற்கும் கடைகள் மற்றும் கறிக்கோழிகள் விற்கும் கடைகள் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் தீவிர சோதனை நடத்தி இறைச்சி கடைகளில் இறந்து போன கோழிகள் இறைச்சிகள் உள்ளதா இறைச்சிகளில் பவுடர்கள் எதுவும் கலக்கப்படுகிறதா?

கெட்டுப்போன சிக்கன்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பழைய கெட்டுப்போன சிக்கன்கள் வைக்கப்பட்டுள்ளதா என்று தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் உணவகங்கள்செயல்பட அனுமதிக்க கூடாது.

உடனடியாக இதற்கான பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் சோழவந்தான் பகுதிகளில் உள்ள தனியார் சிக்கன் கடைகளில் சிக்கன்களை முறையாக தயாரிப்பதில்லை என்ற புகார் தொடர்ச்சியாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுகிறது. ஆகையால் அதிகாரிகள் மேற்கொண்டு பொதுமக்களின் உயிருடன் விளையாடும் நிலையை ஏற்படுத்த கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top