ரூ.8 கோடி செலவில் ஆரணி பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறி பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.பேரூராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த எம்.ராஜேஸ்வரி, துணைத்தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுகுமார்,நியமனக்குழு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த டி.கண்ணதாசன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பேரூராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.8 கோடியில் அம்ருத் 2 என்ற திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்ய மேல்நிலைத் தொட்டி மற்றும் பைப் லைன் செய்யும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆனால்,2 மீட்டர் ஆழத்தில் பைப் புதைப்பதற்கு பதிலாக,2அடி ஆழத்தில் பைப்பு புதைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகளை மேற்கொள்ள சாலைகள் தோண்டப்பட்டு மீண்டும் சீரமைக்கப்படாததால் குண்டும்-குழியுமாக உள்ளதாகவும் அந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேலும்,அம்ருத் 2 திட்ட பணிகளை முறையாக ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு ரூ.3.25 கோடி வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும்,இன்று ரூ.1.25 கோடி வழங்க முற்பட்டதை அறிந்து பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி தலைமையில் மன்ற உறுப்பினர்கள் அருணா,கௌசல்யா, பிரபாவதி,கே.கே.சதீஷ், சுகன்யா,சுபாஷினி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும்,அம்ருத் 2 திட்ட பணிகளின் தரத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து முறைகேடுகளை கலைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும்,இப்ப பிரச்சனையில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்தால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கூறினர்.இப்பிரச்சினையால் ஆரணி பேரூராட்சி மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.