மதுரை:
மதுரை மாவட்டம், 36 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை டாக்டர்எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக 36 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்கள் நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவையை இயக்கி வருகின்றது. இக்கழகத்தில் உள்ள பணிமனைகளின் எண்ணிக்கை 40. மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 2,447 மற்றும் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 2,171. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 12,621 ஆகும்.
இக்கழகம் சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளை இயக்கி வருகின்றது. மேலும், நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட இயக்க தூரம் 9.78 இலட்சம் கிலோமீட்டர் ஆகும். இதனால், மாதத்திற்கு 293.40 இலட்சம் கிலோமீட்டர் தூரம் இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 10.61 இலட்சம் பயணிகளும், மாதம் ஒன்றுக்கு 318.30 இலட்சம் பயணிகளும் பயன்படும் வகையில் வழித்தட சேவைகள் இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், 07.05.2021-அன்று மகளிருக்காக விடியல் பயணத்திட்டம், நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மதுரை கோட்ட இயக்கப் பகுதிகளான மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மகளிர் தினந்தோறும் சுமார் 7.5 இலட்சம் பயனாளர்கள் மற்றும் மதுரை கோட்டம் முழுவதும் இதுவரை 80 கோடி மகளிர் பயனடைந்து வருகிறார்கள்.
இதன் மூலம் மாதம் ஒன்றிக்கு மகளிருக்கு சுமார் 1,000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது. மேலும், 1000 நபர்களுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் , வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் ஆண்டிற்கான அரசு நிதியில் 2,000 புதிய பேருந்துகளும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கையில் 3,000 புதிய பேருந்துகளும், 2023-2024 மற்றும் 2024-2025-ஆம் ஆண்டிற்கான ஜெர்மன் நிதிமூலம் 2,666 பேருந்துகளும் என மொத்தம் 7,666 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மதுரை கோட்டத்திற்கு 683 பேருந்துகளும், ஜெர்மன் நிதிமூலம் 451 பேருந்துகளும் என மொத்தம் 1,134 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மண்டலத்தில் இதுவரை 513 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து,
இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் 36 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பகுதிக்கு 1 சென்ட் நிலமும், நகராட்சி பகுதிக்கு 2 சென்ட் நிலமும், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு 3 சென்ட் நிலம் என்ற அடிப்படையில் அரசு விதிகளுக்கு உட்பட்டு பட்டா வழங்கப்பட்டு வருகின்றன.
கண்மாய் புறம்போக்கு, ஓடை புறம்போக்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு விதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்
, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சிங்காரவேலு , பொது மேலாளர் மணி , மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.