Close
மார்ச் 29, 2025 8:08 மணி

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

வழக்கறிஞர்கள் போராட்டம்.

காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள நீதிமன்றங்கள் இயங்கி வரும் தற்போதைய கட்டிடத்தில் வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்றவாறு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

புதிதாக உருவாக்கப்படும் நீதிமன்றங்கள் அமைவதற்கு தற்போதைய கட்டிடத்தில் இடவசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை.

இதன் காரணமாக காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்ட திட்டம் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களும் இலட்சக்கணக்கான பொதுமக்களும் பெருமளவில் பயனடைவார்கள்.

நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் புதிய நீதிமன்றக் கட்டிடம் கட்டும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரியும். தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைத்து சங்கங்களின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் கண்ணன், திருப்பதி முரளி கிருஷ்ணன் மற்றும் சிவகோபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை அமைக்கக் கோரும் எங்களது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் விரைவாக நிறைவேற்ற ஆவன செய்யுமாறு கோஷங்கள் எழுப்பி முழக்கங்கள் இட்டனர்.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் உமாசங்கரி, நரேந்திரகுமார், சிட்டிபாபு உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top