காஞ்சிபுரம் அருகே உள்ள பாலு செட்டி சத்திரம் கிராமத்திற்கும், திருப்புக்குழி கிராமத்திற்கும் இடையே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்புக்குழி கிராமத்திலிருந்து நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் பாலு செட்டி சத்திரம் கிராமத்திற்கு பேருந்து சேவைக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் பாலு செட்டி சத்திரம் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் நெடுஞ்சாலையின் குறுக்கே வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புக்குழி கிராமத்திற்கும் பாலு செட்டி சத்திரம் கிராமத்திற்கும் இடையே நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பலமுறை மனு அளித்தும் கிராம மக்களின் கோரிக்கைக்கு எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாத நிலையில், இன்று திருப்புக்குழி கிராம மக்கள் கடைகளை அடைத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நெடுஞ்சாலை துறையினர் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலையின் குறுக்கே சென்று வரவேண்டிய சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுரங்கப்பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.