Close
ஏப்ரல் 4, 2025 12:48 மணி

பாலாற்றில், தனியார் பங்களிப்புடன் நீர்நிலை சீரமைப்பு பணி :மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்..!

சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட சிலநீர்பட்டி கிராமப் பகுதியிலுள்ள பாலாற்றில், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை,
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் , நீர்வள ஆதாரங்களை சீரமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக வரத்துவாய்கால், கால்வாய்கள்,

ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை புனரமைத்தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிக நீர்நிலை உள்ள பகுதியாகவும் சிவகங்கை மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட கண்மாய்களும் உள்ளன. விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும், எதிர்கால சந்ததியினர்களின் நலன் காக்கின்ற வகையிலும் நீர்நிலைகளை பாதுகாப்பது அவசியமானதாகும்.

இப்பணியில், அரசுடன் இணைந்து நீர்நிலைகளை பாதுகாத்திட தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்திட முன்வந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தங்களது நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப்பொறுப்பு நிதியின் (Corporate Social Responsblity Fund (CSR Fund)) பங்களிப்புடன் நீர்நிலைகளை சீரமைக்கும் சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் சருகணி ஆற்றுப் பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, சேது பாஸ்கர வேளாண்மை கல்லூரி நிர்வாகம் முன்வந்து, அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு முன்னதாக, ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிந்த காலத்தில், அச்சமயம் நான் தேவகோட்டை சார் ஆட்சியராக பணிபுரிந்த போது, மணிமுத்தாறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

அதேபோன்று, தற்சமயம் மாவட்டத்திலுள்ள சிற்றாறு சீரமைக்கப்படவேண்டிய நீர்நிலைகள் ஆகியவைகளில், மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுடன் தனியார் பங்களிப்பையும் ஒன்றினைத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதில், பாலாற்று பகுதியில் 25.750 கி.மீ தூரத்திற்கும், உப்பாறு பகுதியில் 2.50 கி.மீ தூரத்திற்கும், மொத்தம் ரூ.33,39,375 மதிப்பீட்டில் நீர்நிலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் தொடக்கமாக, சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்று பகுதியில், கருப்பையா ராமாயி அறக்கட்டளை சார்பில், நிர்வாக அறங்காவலர் ஏ.எல்.கருப்பையா செட்டியார் ரூ.05.00 இலட்சம் நன்கொடையாக வழங்கி, நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளனர்.

இதற்கு உறுதுணையாக இருந்த கருப்பையா ராமாயி அறக்கட்டளை அறங்காவலர் கே.ஆர்.மணிகண்டன் , இந்நிகழ்ச்சியில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று, சொக்கனேந்தல் பகுதியைச் சார்ந்த Tessolve தொழில் நிறுவனத்தின் தலைவர் ரவி வீரப்பன், கானாடுகாத்தான் பகுதியை சார்ந்த Laxmi Ceramics நிர்வாக இயக்குநர் முத்துராமன், இப்பணியில் தங்களது பங்களிப்பை அளிப்பதற்கும் முன்வந்துள்ளனர்.

இப்பணிக்கென வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். சீரமைப்பு பகுதிகளில் நிலஅளவீடு பணி மேற்கொள்ளப்பட்டு முறையாக ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, நீர்நிலை கரையோரங்களில் NCC மற்றும் NSS மாணாக்கர்களை கொண்டு மரக்கன்றுகள் நடும்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேபோன்று, தனியார் பங்களிப்புடன் விருச்சூழியாறு பகுதியிலும், 48 கி. மீ தூரத்திற்கு ரூ.54 இலட்சம் மதிப்பீட்டில் நீர்நிலை சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வகையான நீர்நிலைகளின் தகவல்கள் தொடர்பான விவரங்கள் www.sivagangapunalvalam.in என்ற இணையதளத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொண்டு, தங்களின் அலைபேசி மற்றும் இ-மெயில் முகவரியுடன் தங்களது பெயர்களை பதிவு செய்து நீர்நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தங்களது பங்களிப்பினை ஏற்படுத்தி,

மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவகங்கை மாவட்ட நிலையான இயற்கை வள மேலாண்மை சங்கம் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கணக்கு எண். 008401000069803 மூலமாகவோ அல்லது கீழ் குறிப்பிட்டுள்ள Q.R Code மூலமாகவோ தங்களது நன்கொடை தொகையினையும் வழங்கிடலாம்.

நீர்நிலைகளை மீட்டெடுத்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோர் உறுதுணையாக இருந்து, சிவகங்கை மாவட்டத்தினை வளமான மாவட்டமாக உருவெடுப்பதற்கு அனைவரின் பங்களிப்பு இருந்திடல் வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top