Close
ஏப்ரல் 5, 2025 4:36 காலை

ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் விழா மேடை!

பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு பள்ளிக்காக அமைத்துக் கொடுத்த சுமார் பத்து லட்ச ரூபாய் பதிப்பிலான கான்கிரீட் தளத்துடன் அமைக்கப்பட்ட விழா மேடையை திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான விழா மேடையை பள்ளியின் பழைய மாணவர் பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு அர்ப்பணிப்பு செய்தார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் பள்ளியின் ஆண்டு விழா 04/04/2025 அன்று பள்ளி வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது.

விழாவுக்கு ஏத்தாப்பூர் பேரூராட்சியின் தலைவர் காசி. அன்பழகன் தலைமை வகித்தார். விழாவுக்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று, பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி க.மணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் முனைவர் இ.மான்விழி ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர்.

விழாவில் பங்கேற்ற சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, விழாவில் சிறப்புரையாற்றியதோடு, பள்ளியின் பழைய மாணவரும் பஞ்சபூத மருத்துவத்தின் கண்டுபிடிப்பாளருமான பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு பள்ளிக்காக அமைத்துக் கொடுத்த சுமார் பத்து லட்ச ரூபாய் பதிப்பிலான கான்கிரீட் தளத்துடன் அமைக்கப்பட்ட விழா மேடையை திறந்து வைத்தார்.

அத்துடன், நூற்றாண்டு விழா காணும், தான் படித்த பள்ளிக்கு, தனது பெற்றோரின் பெயரால் கொடையாக விழா மேடை அமைத்துக்கொடுத்த பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு மற்றும் அவர் குடும்பத்தினரின் வள்ளல் மனத்தை வாழ்த்திப் பாராட்டினார். இப்பள்ளியின் மாணவ, மாணவியர் கல்வியிலும், தனித் திறமைகளிலும் சிறந்து விளங்குவதைப் பாராட்டி, அதற்கு அடித்தளமாக விளங்கும் தலைமை ஆசிரியை உள்ளிட்ட இருபால் ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.

விழாவின் நிறைவில், பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு, பள்ளிக்கான விழா மேடை அமைத்துக்கொடுக்க தொடக்கத்தில் உந்துதலும் ஊக்கமும் அளித்தவர்கள் முதற்கொண்டு மேடை அமைக்கும் பணி நிறைவடையும் வரை பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்பையும் உற்சாகத்தையும் அளித்த நல்லுள்ளங்கள் அனைவரையும் நினைவில் நிறுத்தி நன்றி தெரிவித்தார்.

பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு

இவ்விழா நிகழ்வு எதிர் வரும் காலத்திற்கான கல்விப் பணியின் முன்னுதாரணம் என்ற பொருளோடு, விழாவில் பங்கேற்ற அனைவரும் ஒருமித்த கருத்தைப் பகிர்ந்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும் விஞ்ஞானியுமான டாக்டர் வி.பொன்ராஜ், திரைப்பட நடிகர் அஜய் ரத்னம்,

நல்லாசிரியர் புலவர் முனைவர் வை.சங்கரலிங்கனார், ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் எஸ்.ரகுநாதன், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எஸ்.சிவக்குமார், ஏ.ஜி.காஸ்மிக் கிளினிக் & ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் மேலான்மை இயக்குநர் டாக்டர் பி.பவித்ரா பாபு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர் வே.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியோடு விழா இனிதே நிகழ்ந்து நிறைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top