திருமங்கலம்:
திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் பேட்டையாக திகழ்கிறது. இதன்மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கப்பலூர் சிட்கோ மற்றும் சுற்றுப்புற பகுதிகளை பசுமை ஆக்கும் வகையில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்திடும் பசுமை திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அதிக நவீன சொட்டு நீர் பாசனம் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை சிட்கோ தொழிற்பேட்டையில் காலியாக உள்ள இடங்களில் கப்பலூர் தொழிலாளர் சங்கம் மற்றும் மதுரை ரோட்டரி கிளப் இணைந்து 10 ஆயிரம் மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டது.
இடைவெளியில்லாத அடர் வன காடுகள் அமைத்திடும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. கொஞ்சம் இடம் கொஞ்சம் கழிவு காடு ரெடி என ஜப்பானிய வேளாண் விஞ்ஞானி கிராமியவாங்கியின் நவீன உத்தியாக சொட்டு நீர்ப்பாசன வசதியுடன் 10 ஆயிரம் மரக்கன்றுகள் உடன் கூடிய அடர்ந்த காடுகளை கப்பலூர் சிட்கோவில் உருவாக்கிவிடும் திட்டத்தின் துவக்க விழாவில் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் கார்த்திக், வைகை அக்ரோ லிமிடெட் சேர்மன் நீதி மோகன், கப்பலூர் தொழிலதிபர் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து புதிய அடர்வன காடுகளை உருவாக்கும் திட்டத்தின் பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதன் மூலம் கப்பலூர் பகுதியில் மட்டுமின்றி சுற்றுப்புற கிராம பகுதிகளில் அனைத்துக்கும் மழை ஈர்ப்பு சக்தியை இந்த மியாவாக்கி காடுகள் கொடுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் உதவி கவர்னர்கள் சோமசேகர் சசிகலா நிர்வாகிகள் ஹரிகரன் பிரபு கண்ணதாசன் நாகப்பன் சுமதிநாயகம் அனிதாஜிப்ரில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.