மதுரை :
பாம்பனில் நடுக்கடலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே தூக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிக்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். இதேபோன்று ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அங்குள்ள அறையில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டைக்கு மாறினார்.
அதன்பின் மண்டபத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் பாம்பன் பாலம் பகுதிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கு நடுக்கடலில் 545 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்குப்பாலத்தை பிரதமர் மோடி, ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரயில் பாம்பன் பாலத்தின் வழியாகச் சென்றது. அதன்பின் தூக்குப்பாலம் மேல் நோக்கி உயர்ந்து செல்ல கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் பாலத்தைக் கடந்து சென்றதை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.