சித்ரா பௌர்ணமி தினத்தை ஒட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் ஐயங்கார்குளம் நடாவி கிணற்றில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உலகப் புகழ்பெற்ற அத்தி வரதர் என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சித்ரா பௌர்ணமி தினத்தன்று காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் கிராமத்தில் அமைந்துள்ள பூமி மட்டத்தின் கீழ் 20 அடி ஆழத்தில் அமைந்துள்ள நடாவி கிணற்றில் எழுந்தருளி அப்பகுதி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
அவ்வகையில் நேற்று மாலை திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட வரதர் பல்வேறு கிராமங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த பின் , இன்று மாலை 7 மணி அளவில் ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவிராயர் திருக்கோயில் எழுந்தருளினார்.
அங்கு நடைபெற்ற சிறப்பு திருமஞ்னத்திற்கு பிறகு பல்வேறு வண்ண மலர்கள் சூடிய அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் நடாவி கிணற்றுக்கு மேள தாளங்கள் முழங்க வருகை புரிந்தார்.
எம்பெருமானை கண்டதும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கங்கள் எழுப்ப பூமி மட்டத்திலிருந்து 20 அடி ஆழத்தில் உள்ள கல் மண்டபத்தினை மூன்று முறை வலம் வர சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அதனை தொடர்ந்து கிணற்றிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு மீண்டும் அருள் பாலித்தார்.
இதன்பின் வேதபாராயணங்கள் பாட நடைபயணமாக பாலாற்றி எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்ட பின் அதிகாலை 3 மணி அளவில் திருக்கோயிலுக்கு புறப்படுவார்.
ஆண்டுதோறும் பூமி மட்டத்திற்கு கீழ் நடைபெறும் இந்த திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் ஐயங்கார் குளம் பகுதியில், பாலாற்று பகுதியில் தங்கியிருந்து வரதரை தரிசனம் செய்து இறையருள் பெற்றனர்.
இத்திரு விழாவினை யொட்டி அய்யங்கார்குளம் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீடுகள் தோறும் மாக்கோலம் போட்டு எம்பெருமானை வரவேற்றனர்.