நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் வாங்கப்படும் லஞ்சத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.. விவசாயி வேண்டுகோள்…
ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மௌனம்..
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் இன்று காலை 11 மணியளவில் விவசாயி நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வேளாண் துறை அலுவலர் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் , விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண்மை துறை அலுவலர்கள் இந்த மாத வேளாண் அறிக்கையை வாசித்து அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கேள்வி நேரம் ஆரம்பித்து பல்வேறு தரப்பினர் தங்கள் குறைகளை தெரிவித்து இருந்தனர்.
இதில் ஒரு விவசாயி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் லாபம் அடைவதாகவும் தெரிவித்தார்.
மற்றொரு விவசாயி விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யும் போது அவர்களிடம் இருந்து அதிகபட்சமாக 55 ரூபாய் முதல் 60 ரூபாய் தரப்படுகிறது எனவும், இதனை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொதுவாக ஒரு மூட்டைக்கு 25 ரூபாய் ஆட்கள் கூலி எனவும், இருபது ரூபாய் இதர கணக்கு என ஆரம்பித்து பகுதிக்கு ஏற்ப தொகை லஞ்சமாக அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது எனவும், ஆட்கள் கூலியை தர விவசாயி சம்மதம் தெரிவித்து வரும் நிலையில் லஞ்சத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததும், அதற்கு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் மௌனம் காத்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.
வெளிப்படையாக லஞ்சத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என விவசாயி கூறியதும் அங்கிருந்து அனைவரும் மௌனம் காத்ததும் அதிர்ச்சி அளித்தது.