Close
ஏப்ரல் 26, 2025 4:14 மணி

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு பரந்தூர் போராட்டக்குழு கடிதம்..!

பரந்தூர் விமான நிலைய போராட்டக்குழு

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் , கூறப்பட்டுள்ளதாவது:-

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து 1000 நாட்களைக் கடந்து தொய்வின்றி நாங்கள் போராடி வருகிறோம்.

எங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) யின் தலைவர் உயர்திரு. ஜின் லீச்சுன் அவர்களுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளோம்.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) சென்னையில் ஏற்கனவே நிதியுதவி செய்து வரும் மெட்ரோ இரயில் 2-ஆம் கட்டம் திட்டத்திற்கான காலமுறை ஆய்வு பணிக்காகக் கடந்த மார்ச் மாதம் சென்னை வந்தது

இப்பயணத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும் மெட்ரோ அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாகவே ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அக்கடிதத்தில் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தால் எங்களது வாழ்வாதாரமான வேளாண் நிலமும், குடியிருப்பும் அழிந்து போகும் அபாயமிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம்
.
மேலும், நீர்நிலைகளை அழித்துக் கட்டப்படவுள்ள இவ்விமான நிலையத்தால் ஏற்படவுள்ள வெள்ள அபாயம் குறித்தும் எடுத்துரைத்துள்ளோம்

மேலும் பரந்தூர் விமான நிலையத்தைத் தவிர பூந்தமல்லி – பரந்தூர் வழித்தடத்தில் மெட்ரோ அமைப்பதற்கான வேறு தேவைகள் இல்லாத காரணத்தால் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளோம்

தமிழ்நாட்டில் உள்ள பிற விமான நிலையங்களின் எண்ணிக்கை, சென்னை விமான நிலையத்தின் மோசமான மற்றும் குறைவான பயன்பாடு, புதிய விமான நிலையத்தால் ஏற்படவுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கங்கள் ஆகியவற்றை எங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்

எவ்வித வளர்ச்சித் திட்டங்களுக்கும் எதிரானவர்கள் நாங்கள் இல்லை. சென்னை போன்ற நகரத்திற்கு மெட்ரோ போக்குவரத்து எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாங்கள் நன்கறிவோம். ஆனால், சுற்றுச்சூழலையும் மக்களின் வாழ்வாதாரமான வேளாண்மையையும் அழித்து கொண்டு வரக்கூடிய இத்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இம்முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top