சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், காடுபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்காக முள்ளி பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
முள்ளிபள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அனுப்பி வைத்து இருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. இதனால், சுமார் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.
சமீபத்தில், பெய்து வரும் கோடைமழையின் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறந்து சம்பந்தப்பட்ட விவசாயிகளின் ஆவணங்களை சரிபார்த்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாய பெருமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்,சமீப காலங்களாக நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் நெல் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகள் விளைவித்த நெல் கொள்முதல் செய்யப்பட முடியாத சூழ்நிலை உள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.