விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை அக்கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சி கோட்டை அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் தென்றல் மகளிர் சுய உதவிக் குழு தலைவர் ஏ.பரமேஸ்வரி தலைமையில் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் அரசு டாஸ்மாக் கடை எண்கள் 11426,11601 ஆகிய இரண்டு கடைகள் எங்கள் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது, இதனை வேறு எங்கேனும் மாற்ற வலியுறுத்தி சம்மந்தப்பட்ட துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, அதனால் கடந்த 1/5/2025 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என கிராம பொது மக்கள் ஒருமனதாக ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் அனைவரும் கையொப்பம் இட்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் இடம்பெற்ற செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.