உசிலம்பட்டி.
உசிலம்பட்டியில் மழைக்கு முன் வீசிய சூறைக்காற்று காரணமாக மதுரை தேனி நெடுஞ்சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது., இதன்படி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பரவலான மழை பெய்தது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்தது. இந்த மழைக்கு முன்பு வீசிய சூறைக்காற்று காரணமாக உசிலம்பட்டி அருகே மாதரையில் சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சூழலில் தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர்.
இதே போல், உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வத்தலகுண்டு பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த கொடுக்காய் புளி மரம் சூறைக்காற்று காரணமாக உடைந்து விழுந்தது, இதன் அருகே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.