Close
மே 8, 2025 10:48 மணி

கொட்டும் மழையில் பூக்குழியை பாதுகாத்த சங்கங்கோட்டை கிராமத்து இளைஞர்கள்..!

மழையில் இருந்து பாதுகாக்கப்பட்ட பூக்குழி

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சோழவந்தான் எம் வி எம் மருது திரையரங்கு அருகில் உள்ள மந்தை களத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதற்காக நேற்று காலை முதல் பூ வளர்க்கும் நிகழ்வு நடைபெற்று பூக்குழி இறங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தது.இதற்கான மண்டக படிதாரர்களான சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூ வளர்ப்பது பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். மாலை 5 மணி அளவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் 4மணி முதல் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யத் துவங்கியது.

இதனால் பூக்குழி இறங்கும் பக்தர்கள் கவலை அடைந்தனர் மழை காரணமாக பூக்குழி இறங்கும் நிகழ்வும் தாமதமாகுமோ என்று அச்சமடைந்தனர். உடனடியாக பூக்குழி இறங்கும் மைதானத்திற்கு வந்த சங்கங்கோட்டை கிராமத்து இளைஞர்கள் பூக்குழி இறங்கும் பகுதியில் மழை நீர் தேங்காதவாறு
மேடை அமைத்து சுற்றிலும் இருந்து மழை நிற்கும் வரை பாதுகாத்தனர்.

இதனால் பூக்குழி இறங்கும் இடம் மழை நீர் தேங்காமல் பாதுகாக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். சங்கங் கோட்டை கிராமத்து இளைஞர்களின் இந்த செயல் பொதுமக்கள் ஆன்மீகவாதிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top