மதுரை.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் 47 . இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், விவசாயி இருளப்பன், கரிசல்கலாம்பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.மாலை 4 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.மழை பெய்ததால், இருளப்பன் ஆடுகளுடன் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளது. வெகு நேரமாகியும் இருளப்பன் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அவரை தேடிச் சென்றபோது வயல்வெளியில் இறந்து கிடந்தார்.இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சம்பவம் குறித்து, திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த இருளப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விவசாயி இருளப்பன் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் கரிசல் கலாம்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.