உசிலம்பட்டி.
உசிலம்பட்டி அருகே குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி சிறுவர்கள் சிறுநீர் கழித்தும், குளித்தும் விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அல்லிக்குண்டம் கிராமத்தில் 1500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் மத்திய அரசின் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் குடிநீர் நீர்தேக்க தொட்டி அமைக்க கடந்த 2022-23 ஆம் ஆண்டு 40 லட்சம் நிதி ஒதுக்கி, கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.
கடந்த 4 மாதங்களுக்கு பணிகள் முடிவடைந்த நிலையில், நீர் தேக்க தொட்டியில் நீரை ஏற்றி தேக்கும் போது, அதிகப்படியான கசிவுகள் ஏற்பட்டதால் அவ்வப்போது சோதனைக்காக மட்டுமே நீர் தேக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல் பகுதிக்கு ஏறிய 4 சிறுவர்கள், சிறுநீர் கழிப்பது, குடிநீர் தொட்டிக்குள் இறங்கி குளிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வேங்கை வயல் பிரச்சனையில் குடிநீர் நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், இதே போன்று உசிலம்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவர்கள் இப்படி செய்கின்றனர். இதைப்போன்ற ஆபத்தான விளையாட்டுகள் விபரீதங்களை ஏற்படுத்தலாம். அதனால் பெற்றோர் சிறுவர்களை கண்டித்து வைக்கவேண்டும். பள்ளி விடுமுறையில் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் பெற்றோர் விழிப்போடு இருப்பது அவசியம்.