பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சமீபத்தில் 9 பேருக்கு “சாகும் வரை ஆயுள் தண்டனை” விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் நீதியின் வெற்றி யைச் சுட்டிக்காட்டினாலும், மறுபுறம் நாம் சமூகமாக எங்கே தவறுகிறோம் என்பதையும் சிந்திக்க வைக்கிறது.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களாக முன்வந்து புகார் அளிக்காமல், பொதுமக்களின் அழுத்தத்தால்தான் இது வெளிச்சத்திற்கு வந்தது என்பது தான் கவலைக் கிடமானது. இதன் பொருள், அவர்கள் குற்றவாளி கள் என்பதல்ல. ஆனால் விழிப்புணர்வின் பற்றாக்குறை இன்னும் பலரையும் மௌனத்தி லேயே மாட்ட வைத்துக் கொண்டி ருக்கிறது என்பதற்கான சாட்சியமாய் இது திகழ்கிறது.
ஒரு ஆணை முழுமையாக நம்பி, பெற்றோருக்கே தெரியாமல் தனிப்பட்ட உறவுகளில் ஈடுபடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இளம் பெண்கள் உணரவேண்டும். காதலும் நம்பிக்கையும் மனித உறவுகளுக்கு தேவையானவைதான். ஆனால், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அபாயங்க ளையும் புரிந்து கொள்வது அவசியம். அதற்கென வயதும் இருக்கிறது.
“ஊசியின் இடமில்லாமல் நூல் நுழையாது” என்பதுபோல, ஒருவர் மீது நாம்வைக்கும் நம்பிக்கையே, சில நேரங்களில், அவர்களுக்கு நம்மை தவறான பாதைக்கு இட்டுசெல்ல வாய்ப்பளிக்கிறது. பெண்களுக்கு கல்வி, தொழில், முன்னேற்ற வாயில்கள் அதிகரித்துள்ள போதும், உணர்வுப்பூர்வமான தவறான முடிவுகள் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடும்.
பெண்கள் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு தீர்மானத்திலும் – “இது என் எதிர்காலத்தை பாதிக்குமா?” என்ற கேள்வியை முன்வைக்க வேண்டும். காதலெனும் கரையற்ற உணர்வில் மூழ்கும்போதும், ஒவ்வொரு செயலும் ஒரு எதிர்வினையை உருவாக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
இதனுடன், பெண்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தும் ஆண்களின் பொறுப்பின்மையும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும். ஒருவர் காட்டும் அன்பையும் மரியாதையையும் கையாடிக்கொண்டு, தனிமைப்படுத்தி, பின் சுயநலத்திற்காக அந்த நபரை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் செயல்கள் கண்டிப்பாக குற்றம்.
பொய்யான வாக்குறுதிகள், புகைப்படங்களை வைத்து பிளாக்மெயில் செய்வது, சமூக ஊடகங்களில் அவதூறுகள், தனியுரிமை மீறல் — இவை அனைத்தும் ஆண்களின் ஒழுக்கப்பற்றின் மையை வெளிப்படுத்துகின்றன. இந்த மனப்பான் மையை சமூகமே எதிர்க்க வேண்டும்.
ஆண்களின் இதுபோன்ற அத்துமீறும் செயல்களை கண்டு பெண்கள் பயந்து கொண்டு அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லக்கூடாது. துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். பெற்றோரிடமோ அல்லது நம்பிக்கையான நபர்களிடமோ தனக்கு நேர்ந்த கொடுமையை தைரியமாக எடுத்து சொல்லவேண்டும்.
சமூக ஊடகங்களில் புகைப்படம் பகிரப்பட்டால் சைபர் கிரைம் தடுப்பு பிரிவில் தைரியமாக புகாராளிக்க முன்வர வேண்டும். உங்கள் ரகசியம் கண்டிப்பாக பாதுகாக்கப்படும்.. அதை விட்டுட்டு விபரீத முடிவுகளை எடுக்கக்கூடாது. எதற்குமே தற்கொலை என்பது தீர்வாகாது.பெண்களை தவறாக பயன்படுத்த நினைக்கும் ஆண்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும்.
இன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது அந்த இழப்பிற்கு உண்மையான ஈடாக முடியுமா? வாழ்க்கையின் பெரும்பகுதி பாதிக்கப்பட் டுவிட்டது அல்லவா? இப்படிப்பட்ட சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது என்றால், அதற்கான முன்னெடுப்பு பெண்களின் விழிப்புணர்வில் தான் தொடங்கப்படவேண்டும்.
தவறுக்கு சட்டம் தண்டனை வழங்குகிறது. ஆனால் விழிப்புணர்வே தவறை தடுக்கும் பாதுகாப்பை உருவாக்கும். பெண்கள் தங்களது உடலையும், உள்ளத்தையும் மதித்து, பாதுகாத்து வாழ்வதே உண்மையான வெற்றி.
நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கியது. ஆனால் நம் சமுதாயமும் ஒரு முடிவெடுக்க வேண்டும் — “எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அசிங்கமான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வை வளர்த்தெடுக்க வேண்டும்.” இதுவே உண்மையான பாதுகாப்பு அரண்.
நாம் அனைவரும் – ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் – நம் செயல்களின் விளைவுகளை சிந்தித்து நடத்துவதே ஒரு நாகரிகச் சமுதாயத்தின் உண்மையான அடையாளம்.
~ #ஈரநெஞ்சம் மகேந்திரன்#